ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை அமைச்சரவையில் இன்று சமர்ப்பிப்பு!
Monday, February 15th, 2021ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் கடந்த முதலாம் திகதி கையளிக்கப்பட்ட, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை இன்றையதினம் அமைச்சரவையில் முன்வைக்கப்பட உள்ளது.
இந்த ஆணைக்குழுவானது, சுமார் ஒன்றரை ஆண்டுகளாக 457 பேரிடம் தாக்குதல் சம்பவம் தொடர்பில் சாட்சியம் பதிவு செய்திருந்தது.
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நாட்டில் மூன்று தேவாலயங்கள் உள்ளிட்ட எட்டு இடங்களில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அந்தத் தாக்குதல்களில் 260 பேர் அளவில் மரணித்ததுடன், பெருமளவானோர் காயமடைந்தனர்.
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக ஐவர் அடங்கிய ஜனாதிபதி ஆணைக்குழு, கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20ஆம் திகதி நிறுவப்பட்டது. ஆணைக்குழுவின் தவிசாளராக உயர்நீதிமன்ற நீதியரசர் ஜனக டி சில்வா செயற்பட்டார்.
அதன் ஏனைய உறுப்பினர்களாக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் நிஷ்சங்க பந்துல கருணாரத்ன, ஓய்வுப்பெற்ற மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் சுனில் ராஜபக்ச, ஓய்வுப்பெற்ற மேல்நீதிமன்ற நீதிபதி பந்துல குமார அத்தபத்து மற்றும் ஓய்வுப்பெற்ற அமைச்சின் செயலாளர் மங்கலிகா அதிகாரி ஆகியோர் செயற்பட்டனர்.
ஆணைக்குழுவின் முதலாவது இடைக்கால அறிக்கை, கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் திகதியும், இரண்டாவது இடைக்கால அறிக்கை 2020 மார்ச் மாதம் 2ஆம் திகதியும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் விசாரணை பிரிவு 1588 பேரிடம் தாக்குதல் தொடர்பில் வாக்குமூலங்களை பதிவு செய்திருந்தது.
அப்போது பாதுகாப்பு அமைச்சுப் பதவியை வகித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரும் அவர்களில் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|