சேவைப் பிரமாணக் குறிப்புப் பிரச்சினைக்குத் தீர்வு வழங்கினால் ‘அஸ்வெசும’ நலன்புரி பயனாளிகள் தொடர்பான பிரச்சினையில் தலையிடத் தயார் – கிராம உத்தியோகத்தர் சங்கம் தெரிவிப்பு!

Saturday, August 19th, 2023

சேவைப் பிரமாணக் குறிப்புப் பிரச்சினைக்குத் தீர்வு வழங்கினால் ‘அஸ்வெசும’ நலன்புரி பயனாளிகள் தொடர்பான பிரச்சினையில் தலையிடத் தயார் என கிராம உத்தியோகத்தர் சங்கத்தினர் நாடாளுமன்ற வழி வகைகள் பற்றிய குழுவில் தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டளி சம்பிக ரணவக தலைமையில் அண்மையில் (15) கூடிய பாராளுமன்ற வழிவகைள் பற்றிய குழுவிலேயே கிராம உத்தியோகத்தர் சங்கத்தினர் இவ்வாறு தெரிவித்தனர்.

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது ஏற்பட்ட பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இந்தக் குழு கூடியிருந்ததுடன், ‘அஸ்வெசும’ திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள மேன்முறையீடுகள் தொடர்பில் செயற்படுவதற்குத் தாம் தயார் இல்லையென கிராம உத்தியோகத்தர் சங்கத்தினர் தெரிவித்தனர். சமுர்த்தி உத்தியோகத்தர்கள் தமது கடமையிலிருந்து விலகிய பின்னர் கிராம உத்தியோகத்தர்கள் மீது அழுத்தத்தைக் கொடுப்பது ஏற்புடையது அல்ல என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

குறிப்பாக இதுவரை ‘அஸ்வெசும’ தொடர்பில் 10 இலட்சத்துக்கும் அதிகமான மேன்முறையீடுகள் தாக்கல்செய்யப்பட்டுள்ள சூழ்நிலையில் கிராம உத்தியோகத்தர்கள் தலையிட்டு இப்பணிகளை முன்னெடுப்பது பொருத்தமற்றது எனக் குறிப்பிட்ட அவர்கள், சமுர்த்திக் கொடுப்பனவைக் குறைத்துள்ளார்கள் எனப் பொதுமக்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்ளத் தாம் தயாரில்லையென்றும் தெரிவித்தனர். இதில் தலையிட்டால் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் தங்களை மக்கள் வெறுக்கத் தொடங்குவார்கள் என்றும் குறிப்பிட்டனர்.

இருந்தபோதும், கிராம உத்தியோகத்தர்கள் சேவைப் பிரமாணக் குறிப்பில் பிரச்சினை காணப்படுவதாகவும், இது தொடர்பான வரைபொன்று தயாரிக்கப்பட்டு ஒரு சில சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டிருப்பதாகவும், இது விடயத்தில் விரைவில் தீர்வொன்றைப்பெற்றுத் தருமாறும் கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர். இதற்கமைய சேவைப் பிரமாணக் குறிப்புப் பிரச்சினையைத் தீர்த்துவைத்தால் அஸ்வெசும வேலைத்திட்டத்தில் இணைந்து பணியாற்ற முடியுமா எனக் குழுவின் தலைவர் கௌரவ பாட்டளி சம்பிக ரணவக கேள்வியெழுப்பினார். இதற்கு இணங்குவதாக கிராம உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.

இதற்கமைய கிராம உத்தியோகத்தர்களின் சேவைப் பிரமாணக் குறிப்பைத் தயாரிக்கும் நடவடிக்கையை விரைவுபடுத்துவது தொடர்பில் பொதுநிர்வாக அமைச்சுக்கு அறிவிப்பதாகவும் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார். அத்துடன், அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் கிராம உத்தியோகத்தர்கள் பணியை மேற்கொள்வதற்கான அமுலாக்கல் கடிதத்தை வெளியிடுமாறும் நலன்புரி நன்மைகள் சபைக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டது. அத்துடன், குடிசன மதிப்பீட்டுக்கான தரவுத் தளத்தைத் தயாரிக்கும்போது, அந்தத் தரவுத் தளத்தின் மூலம் தேவையான தகவல்களைப் பெறுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறும் நலன்புரி நன்மைகள் சபைக்கு அறிவிக்கப்பட்டது.

2022ஆம் ஆண்டு 24ஆம் இலக்க நலன்புரி நன்மைகள் சட்டத்தின் ஊடாகத் தண்டனை வழங்கக்கூடிய முறைகள் குறிப்பிடப்பட்டிருப்பதாகவும், அதில் சிக்கல்கள் இருப்பதாகவும் கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் சுட்டிக்காட்டியது.

இதற்கமைய தண்டனை தொடர்பான பிரச்சினைக்கு தேவையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என குழுவின் தலைவர் குறிப்பிட்டார்.

மேலும், 800,000 பேர் காப்புறுதியைப் பெறத் தகுதியுடையவர்கள் என்றும், மேலும் சுமார் 1,200,000 பேருக்கு காப்புறுதி மானியம் வழங்கப்படலாம் என்றும் நலன்புரி நன்மைகள் சபையைப் பிரதிநிதித்துவப்படுத்தி வருகை தந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தக் குழுக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்ஜீவ எதிரிமான்ன ஆகியோரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது

Related posts: