தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 19 பேர் கைது!

Sunday, April 25th, 2021

இலங்கை முழுவதும் நேற்று மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின்போது, தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதிப்பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக அஜித் ரோஹண மேலும் கூறியுள்ளதாவது, “முகக்கவசம் அணியாமை மற்றும் தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டிலேயே குறித்த 19பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர்களில் பெரும்பாலானோர் கிரிபத்கொட மற்றும் பிலியந்தல ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.

அத்துடன்  முகக்கவசம் அணியாதவர்கள் மற்றும்  சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாதவர்கள் மீது  கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இதேவேளை கடந்த 2020 ஒக்டோபர் 31 முதல் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாத 3470 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

எனவே வீட்டை விட்டு வெளியேறும்போது முகக்கவசம் அணிய வேண்டும் என்பதுடன் பொது போக்குவரத்தைப் பயன்படுத்துபவர்கள் இது குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும்.

மேலும் சுகாதார அதிகாரிகளின் ஒப்புதல் இல்லாமல் எந்த விழாவையும் நடத்த முடியாது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: