சேதனைப் பசளை உற்பத்தி விவசாயிகளை ஊக்குவிப்பதற்கான விசேட வேலைத்திட்டம் – இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவிப்பு!

Saturday, December 11th, 2021

நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு தேசிய கொள்கைகள் திட்டத்துக்மைய ஸ்ரீலங்கா ஹதபிம அதிகார சபையின் ஊடாக சேதனப் பசளை உற்பத்தி செய்யும் விவசாயிகளை ஊக்குவிப்பதற்கான வேலைத்திட்டமானது சிறந்த முறையில் முன்னெடுக்கப்பட்டுவருவதாக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டம் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் வழிகாட்டலில் இடம்பெற்றுவருகிறது.

தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களில் சேதனப் பசளை உற்பத்தி திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, நுவரெலியா மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் சேதனப் பசளை உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் விவசாயிகளுக்கு உபகரணங்கள் வழங்குவதற்கான வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் 6,303 விவசாயிகளுக்கு உபகரணங்கள் எதிர்வரும் நாட்களில் வழங்கப்பட உள்ளன. இவ் வேலைத் திட்டத்தில் கோரளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் 405 விவசாயிகளுக்கும் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவு 499 விவசாயிகளுக்கும் மண்முனை தெற்கு மற்றும் எருவில்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 429 விவசாயிகளுக்கும் கோரளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 1,108 விவசாயிகளுக்கும், மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் 641 விவசாயிகளுக்குமாக முதற்கட்டமாக 3,801 விவசாயிகளுக்கு விவசாய உபகரணங்கள் பெற்றுக்கொடுப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: