சிறுவர்களுக்கு ஏற்படும் இரு புதிய நோய்கள் இலங்கையில் கண்டுபிடிப்பு – சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை தெரிவிப்பு!

Wednesday, August 25th, 2021

கொரோனா தொற்றுறுதியான சிறுவர்களுக்கு ஏற்படும் இரண்டு புதிய நோய் நிலைமைகள் தொடர்பில், சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் கண்டறியப்பட்டுள்ளது.

சைலண்ட் ஹைபொக்ஸியா மற்றும் மெ-சிந்தமெட்டிக் நியூமோனியா முதலான இரு நோய்களே இவ்வாறு கண்டறியப்பட்டுள்ளதாக சிறுவர் விசேட வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

வயது முதிர்ந்தவர்களிடையே மாத்திரம் பெருவாரியாக அடையாளம் காணப்பட்ட இந்த நோய் நிலைமையானது, தற்போது கொவிட்-19 தொற்றுறுதியான சிறுவர்களிடமும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் சிறுவர் விசேட வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நோய் தன்மையால், உடலில் பிராணவாயுவின் நிலையானது மிகவும் குறைந்த மட்டத்திற்கு செல்லும் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

சுவாசிப்பதற்கு இயலாத நிலை ஏற்படாமல், நடமாடக்கூடிய சிறுவர்களுக்கு, பிராணவாயுவின் நிலையானது குறைந்த மட்டத்திற்கு செல்லும் தன்மை உள்ளதாக, சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப்பிரிவுக்கு பொறுப்பான விசேட வைத்தியர் நலின் சி கித்துல்வத்த தெரிவித்துள்ளார்.

எனினும், சில சந்தர்ப்பத்தில், சாதாரண நிலையில் பிராணவாயு சாதாரண மட்டத்தில் இருக்கின்றபோதிலும், நடமாடும் சந்தர்ப்பத்தில் பிராணவாயு நிலை குறைவடையும் என்றும், அது மோசமான நிலையாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலைமையைத் தவிர்க்க வேண்டும் என விசேட வைத்தியர் நலின் சி கித்துல்வத்த தெரிவித்துள்ளார்.

இயலுமாயின், நாளொன்றுக்கு இரண்டு தடவைகள் குருதியில் உள்ள பிராணவாயுவின் அளவை பரிசோதித்து பார்ப்பது சிறந்ததாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: