கொரோனா அச்சம்: மீண்டும் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது குறித்து கல்வி அமைச்சு ஆலோசனை!

Sunday, July 12th, 2020

நாட்டில் கொரோனா தாக்கம் மேலும் அதிகரித்தால், பாடசாலை மாணவர்களுக்கு மீண்டும் விடுமுறை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ள கல்வி அமைச்சு இதன்மூலம் சுகாதார நிலைமையை உறுதிப்படுத்த முடியும் என தெரிவித்துள்ளது.

அத்துடன் நிலைமை மோசமடைந்தால் மீண்டும் அனைத்து பாடசாலைகள் மற்றும் ஏனைய கல்வி நிறுவனங்களுக்கும் மீண்டும் விடுமுறை வழங்கி அனைவரது சுகாதார பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென கல்வி அமைச்சு அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, பிரதேசமட்ட நிலைமை தொடர்பாக அறிக்கையிடுவதற்கு விசேட தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பிரதி கல்விப் பணிப்பாளரின் தலைமையின் கீழ், இந்த நடவடிக்கைகள் கண்காணிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், 1988 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து பாடசாலை அதிபர்கள், கல்வி பணிப்பாளர்கள் உள்ளிட்ட கல்விச் சேவை அதிகாரிகள் தாம் சேவையாற்றும் பிரதேசங்கள் தொடர்பாக தகவல்களை வழங்க முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்ததைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம்முதல் பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன. அதன் பின்னர் வைரஸின் வீரியம் குறைவடைந்ததைத் தொடர்ந்து, கடந்த 6ஆம் திகதிமுதல் சுகாதார வழிகாட்டல்களுடன் மீண்டும் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் தற்போது நாட்டில் மீண்டும் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகுபவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது.

கடந்த 3 நாட்களில் மாத்திரம் 400 இற்கும் அதிகமான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர். இதனையடுத்து, நாட்டில் மீண்டும் ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என செய்திகள் வெளியாகியிருந்தன. எனினும் அவ்வாறு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லையென அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. எவ்வாறிருப்பினும் நாட்டில் கொரோனா வைரஸின் தாக்கம் மேலும் அதிகரித்தால், பாடசாலை மாணவர்களுக்கு மீண்டும் விடுமுறை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சு தற்போது அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: