கிரிக்கெட் நிறுவனத்தில் நிலவும் ஊழல் மோசடிகள் தொடர்ச்சியாக அம்பலம் – இலங்கை கிரிக்கெட்டின் செயலாளர் மொஹான் டி சில்வா இராஜனாமா!

Saturday, November 4th, 2023

2023 ஆம் ஆண்டுக்கான உலக கிண்ணக் கிரிக்கட் தொடரில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி படுதோல்வியடைந்தமையை அடுத்து ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனத்தின் தெரிவுக்குழு மற்றும் அந்த நிறுவனத்தின் நிர்வாக அதிகாரிகள் உடனடியாக பதவி விலக வேண்டும் என அரசியல்வாதிகள், பொது அமைப்புகளின் ஆர்வலர்கள் மற்றும் விளையாட்டு ரசிகர்கள் கோரி வருகின்றனர்.

இந்த பின்னணியில் நேற்றுமுதல் ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனத்தில் காவல்துறையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் இன்றையதினமும் பல்வேறு தரப்பினர் ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்திய அணிக்கு எதிராக நேற்றுமுன்தினம் இடம்பெற்ற போட்டியில் இலங்கை அணி படுதோல்வியடைந்த நிலையில், தற்போதைய ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனத்தின் நிர்வாக அதிகாரிகள் மற்றும் தெரிவுக்குழுவுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இதேவேளை, ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனத்தின் நிர்வாகம் உடனடியாக பதவி விலக வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க கோரியுள்ளார் இலங்கை அணியின் தோல்விக்கு, தேசிய தேர்வாளர்கள் பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் (எஸ்.எல்.சி) செயலாளர் மொஹான் டி சில்வா தனது பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்துள்ளார்.

கிரிக்கெட் நிறுவனத்தில் நிலவும் ஊழல் மோசடிகளை தொடர்ச்சியாக அம்பலப்படுத்தப்பட்டு வரும் நிலையில், பதவி விலகல் கடிதத்தை கையளிப்பதன் மூலம் அவர் தனது பொறுப்புகளில் இருந்து விடுபட முடியுமா என்பது பிரச்சினையாக உள்ளது.

இதேவேளை இலங்கை கிரிக்கெட் வீரர்களின் ஒழுக்கம் மற்றும் கிரிக்கெட் நிர்வாகிகளின் தொலைநோக்கற்ற செயற்பாடுகள் தொடர்பிலும் சூதாட்ட விடுதிகளில் விளையாடி, இரவு விடுதிகளில் இரவைக் கழிக்கும் கிரிக்கெட் வீரர்களிடம் இருந்து நாடு வெற்றிகளை எதிர்பார்க்க முடியாது என ஊடகங்கள் சுட்டிக்காட்டியிருந்த போதிலும், ஸ்ரீ லங்கா கிரிக்கெட் அதிகாரிகள் அதனை கண்டுகொள்ளாதது இவ்வாறான கசப்பான தோல்விகளுக்கு ஏதுவாக இருக்கின்றது.

எவ்வாறான திறமை இருந்தாலும், ஒழுக்கம் இல்லாமல் வெற்றியை எதிர்பார்க்க முடியாது என்பது இந்தத் தோல்விகள் மூலம் மீண்டும் மீண்டும் நிரூபணமாகியுள்ளது.

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் அணியை மீண்டும் வெற்றிப்பாதைக்கு கொண்டு வர வேண்டுமானால், அவர்களை வழிநடத்த ஊழலற்ற சரியான தலைமை வேண்டும் என்பதே உண்மை

Related posts: