கடலட்டை பிடிப்போரை 48 மணித்தியாலங்களுக்குள் வெளியேறுமாறு பணிப்பு! பிரதேச செயலர் !

Thursday, October 4th, 2018

யாழ் வடமராட்சி கிழக்குப் பகுதியில் பருத்தித்துறை நீதிமன்றப் பகுதிக்குள் தங்கியிருந்து கடலட்டை பிடிப்பவர்களை 48 மணி நேரத்தில் வெளியேறுமாறு பிரதேச செயலர் பகிரங்க அறிவித்தல் விடுத்துள்ளார்.

வடமராட்சி கிழக்கில் தங்கி நின்று கடலட்டை தொழிலில் ஈடுபடும் வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அரச நிலத்தை அனுமதியின்றி ஆக்கிரமித்து வாடி அமைத்துத் தங்கியிருந்தனர். கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற எல்லைக்குள் வாடி அமைத்தவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. கடலட்டை பிடிப்போரை வெளியேறுமாறு நீதிமன்றம் கட்டளை வழங்கியது.

வடமராட்சி கிழக்குப் பகுதியின் பருத்தித்துறை நீதிமன்ற எல்லைப்பரப்புக்குள் கடலட்டை பிடிப்பில் ஈடுபடும் பிற மாவட்ட மீனவர்கள் தொடர்ந்தும் அரச காணியில் அனுமதியின்றி தங்கியுள்ளனர். இவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கு ஏற்கனவே ஒரு தடவை அறிவித்தல் ஒட்டப்பட்டிருந்த நிலையில் நாகர்கோவில் கிழக்கு, நாகர்கோவில் மேற்கு பகுதியில் இரண்டாவது அறிவித்தல் நேற்று ஒட்டப்பட்டுள்ளது.

பிரதேச செயலர் கனகசபாபதி கனகேஸ்வரன் இது தொடர்பில் தெரிவித்ததாவது:

அரச காணியில் அத்துமீறி குடியிருப்பதற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யும் வகையில் முன் அறிவித்தலாகவும் அவர்களிற்கான இறுதிச் சந்தர்ப்பமாகவும் அறிவுறுத்தல் ஒட்டப்பட்டுள்ளது. 48 மணித்தியாலம் வெள்ளிக்கிழமையுடன் முடிவுறுகின்றபோதும் அங்கிருந்து அவர்கள் வெளியேறாத சந்தர்ப்பத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்படும் என்றார்.

Related posts: