எரிபொருள் – வேலைவாய்ப்பு துறைகளில் இருதரப்பு உறவை வலுப்படுத்த இலங்கைக்கு ஒத்துழைப்பு – நாடு திரும்பும் ஓமான் தூதுவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் உறுதி!

Friday, July 1st, 2022

எரிபொருள், எரிவாயு, எரிசக்தி, வேலைவாய்ப்பு மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு போன்றவற்றில் இலங்கைக்கும் ஓமானுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கு ஆதரவளிப்பதாக இலங்கைக்கான ஓமான் தூதுவர் அஹமட் அலி சயீட் அல் ரஷீட் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் உறுதியளித்துள்ளார்.

இலங்கைக்கான தூதுவராக தனது சேவைக்காலத்தை முடித்துக் கொண்டு நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்னர் இன்று (01) கொழும்பு – கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதியை சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது, ஓமானில் இலங்கையிலுள்ள பயிலுநர்களுக்கான வேலை வாய்ப்புக்களை அதிகரிப்பதற்கு ஒத்துழைக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஓமானிய தூதுவரிடம் கோரிக்கை விடுத்தார்.

இலங்கைக்கான ஓமான் தூதுவராக தான் எட்டு ஆண்டுகள் பணியாற்றிய நிலையில் தற்போது ஓமான் வெளிவிவகார அமைச்சில் பணியாற்றுவதற்காக நாட்டை விட்டு வெளியேறுவதாக தெரிவித்த அஹமட் அலி சயீட் அல் ரஷீட், இலங்கைக்கு ஆதரவளிக்க தன்னால் இயன்றவரையில் நடவடிக்கைகளை எடுப்பதாக ஜனாதிபதியிடம் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், இக்கலந்துரையாடலில் நாட்டில் வர்த்தக மற்றும் முதலீட்டு வாய்ப்புக்களை விரிவுபடுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: