எதிர்வரும் 7 ஆம் திகதிமுதல் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகள் மீள ஆரம்பம் – வலுசக்தி அமைச்சு அறிவிப்பு!

Sunday, December 5th, 2021

அண்மையில் தற்காலிகமாக செயற்பாடுகள் நிறுத்தப்பட்ட சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் 7 ஆம் திகதிமுதல் இந்த செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்படும் என வலுசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

போதிய மசகு எண்ணெய் விநியோகம் இன்மையால் கடந்த நவம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.

இதேவேளை, சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கான மசகு எண்ணெய்யை பெற்றுக் கொள்வதற்கு நைஜீரிய எண்ணெய் நிறுவனத்திற்கு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ள உடன்படிக்கையை இரத்து செய்வதற்கும் கனியவள கூட்டுதாபனம் தீர்மானித்துள்ளது.

நைஜீரியாவின் எண்ணெய் நிறுவனமொன்றுடன் கைச்சாத்திடப்பட்டுள்ள உடன்படிக்கைக்கு அமைய 9 மாதங்களுக்கான மசகு எண்ணெய் விநியோகிக்கப்பட வேண்டும் என கனியவள கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் அபேசிங்க தெரிவித்தார்.

இதற்கமைய கடந்த ஜூன் மாதம்முதல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் வரையிலான காலப்பகுதியில் 20 இலட்சத்து 62 ஆயிரத்து 500 மசகு எண்ணெய் கொள்கலன்கள் கிடைக்கப்பெற வேண்டும்.

எவ்வாறாயினும் இதுவரையில் எந்தவொரு மசகு எண்ணெய் கொள்கலனும் குறித்த நிறுவனத்திடம் இருந்து வழங்கப்படவில்லை.

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கான மசகு எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டமைக்கு இது பிரதான காரணம் எனவும் கனியவள கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் அபேசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: