ஊர்காவற்றுறை கர்ப்பிணிப் பெண் கொலை வழக்கை புலனாய்வுப் பிரிவினர் பொறுப்பேற்கவில்லை!

Thursday, March 8th, 2018

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறைப் பிரதேசத்தில் கர்ப்பிணிப் பெண் ஒருவரை படுகொலை செய்தமை தொடர்பிலான வழக்கினை இதுவரையில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் பொறுப்பெடுக்கவில்லை என மன்றில் தெரிவிக்கப்பட்டது.

ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன்போது விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரு சந்தேக நபர்களும் மன்றில் முற்படுத்தப்பட்டனர்.

குறித்த வழக்கின் விசாரணையை கடந்த ஜனவரி மாதம் 24 ஆம் திகதி குற்ற புலனாய்வுப் பிரிவினருக்கு மாற்றுமாறு நீதிமன்று உத்தரவிட்டு இருந்தது. எனினும் இதுவரையில் குற்றபுலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளைப் பொறுப்பெடுக்கவில்லை.

கடந்த மாதம் 21 ஆம் திகதி மன்றில் முன்னிலையான குற்றப்புலனாய்வுப் பிரிவினர் வழக்கினை பாரமெடுக்குமாறு பொலிஸ் மா அதிபரிடம் இருந்து இதுவரையில் தமக்கு அறிவுறுத்தல் கிடைக்கப்பெறவில்லை என மன்றில் தெரிவித்தனர். இந்த நிலையில் இதுவரையில் பொலிஸ் மா அதிபரிடம் இருந்து குறித்த வழக்கினை பாரம் எடுக்குமாறு குற்ற புலனாய்வு பிரிவினருக்கு அறிவுறுத்தல் கிடைக்க பெறவில்லை என பொலிஸார் மன்றில் தெரிவித்தனர்.

அதனை அடுத்து சந்தேக நபர்கள் இருவரையும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

Related posts: