சிறுநீரகத்தின் விலை 5 இலட்சம் ரூபா: இலக்கு வைக்கப்படும் வறிய மக்கள்!

Saturday, October 20th, 2018

வறிய மக்களின் சிறுநீரகங்களை விலைபேசும் பாரிய மோசடி வேலைத்திட்டமொன்று மாத்தளை மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் அதிகார வர்க்கத்தினர் துரித கவனம் செலுத்துவது அவசியம் எனவும் மாத்தளை மாவட்ட சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவ்விவகாரம் தொடர்பில் இச்சிவில் அமைப்புப் பிரதிநிதிகள் தெரிவிக்கையில்:

உக்குவளைப் பிரதேசத்தைச் சேர்;ந்த வர்த்தகர் ஒருவர் மற்றும் சிலருடன் இணைந்து உக்குவளை, இறத்தோட்டை பலாபத்வலை, மாத்தளை வடக்கு, பல்லேப்பொளை, மாதிப்பொளை மற்றும் கலேவெல ஆகிய பிரதேசங்களில் மிகவும் திட்டமிட்ட முறையில் கூட்டு சேர்ந்து வறிய குடும்பங்களை இனங்கண்டு அவர்களது சிறுநீரகங்கள் ஒவ்வொன்றுக்கும் தலா 5 இலட்சம் ரூபா வீதம் கொள்வனவு செய்வதற்கான பேரம் பேசப்படுகின்றது.

பின்னர் குறித்த நபர்களின் சிறுநீரகங்கள் அகற்றப்பட்டதும் அவர்களுக்கு இரண்டு முதல் இரண்டரை இலட்சம் ரூபா வரை மாத்திரமே பணம் வழங்கப்படுகின்றது. எஞ்சிய தொகை பின்னர் தரப்படும் என தெரிவிக்கப்படுகின்ற போதிலும் அவை ஒருபோதும் வழங்கப்படுவதில்லை.

மிகவும் வறிய குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர், யுவதிகள் மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என்போருடன் பெரும் எண்ணிக்கையிலான தோட்டத் தொழிலாளர்களும் இச் சிறுநீரக வர்த்தக மோசடிக்காரர்களிடம் மிகவும் சுலபமாக சிக்கிக் கொள்கின்றனர்.

கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த சில வைத்தியர்கள், உக்குவளைப் பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் மற்றும் சில இடைத்தரகர்கள் ஆகியோர் இச்சட்ட விரோத சிறுநீரக வர்த்தக மோசடி நடவடிக்கைகளை மிகவும் இரகசியமாக முன்னெடுத்து வருவதாக இச்சிவில் அமைப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.

Related posts: