உக்ரைன்- ரஷ்யா இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி – புடினை நேரில் பேச அழைக்கிறார் ஜெலென்ஸ்கி!

Friday, March 4th, 2022

உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கிடையில் நடைபெறும் போரை நிறுத்துவதற்கான இரண்டாம் கட்ட பேச்சுவார்தையில் துரதிர்ஷ்டவசமாக, உக்ரைனுக்குத் தேவையான முடிவுகள் இன்னும் எட்டப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

ரஷ்ய மற்றும் உக்ரேனிய பிரதிநிதிகள் நான்கு நாட்களில் இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தைக்காக பெலாரஸின் பிரெஸ்ட் பகுதியில் நேற்று வியாழக்கிழமை கூடினர்.

உக்ரைன் தரப்பில் போர்நிறுத்தம் மற்றும் பொதுமக்களை வெளியேற்றுவதற்கான மனிதாபிமான நடவடிக்கைகள் என இரு விடயங்கள் வலியுறுத்தப்பட்டன.

ஆனால், பல மணிநேர பேச்சுவார்த்தையின் போது, பொதுமக்களை வெளியேற்றுவதற்கான மனிதாபிமான நடைக்கூடங்களை அமைப்பதற்கு மட்டுமே தீர்வு எட்டப்பட்டதாக ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் போடோலியாக் கூறினார்.

உக்ரைனில் இருந்து அனைத்து துருப்புக்களையும் ரஷ்யா திரும்பப் பெற வேண்டும் என்று உக்ரைன் அதிகாரிகள் முன்பு கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் விரைவில் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைனுடனான எந்தவொரு சமாதான உடன்படிக்கையிலும் உக்ரைன் இராணுவமயமாக்கல் என்ற வாக்குறுதியை உள்ளடக்கியிருக்க வேண்டும் என்று ரஷ்யா தொடர்ந்து வலியுறுத்தும் என்று ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் கூறினார்.

உக்ரைன் ஒரு நடுநிலை நிலையை ஏற்றுக்கொள்வதைப் பற்றி விவாதிக்க விரும்புவதாகவும், வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பில் (நேட்டோ) சேருவதற்கான அதன் இலட்சியங்களைக் கைவிட ஒப்புக்கொள்வதற்கும் ரஷ்யா விரும்புகிறது.

இதனிடையே, போரை முடிவுக்கு கொண்டுவர நடத்தப்பட்ட இரு கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியிலே முடிந்துள்ள நிலையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் நேரடி பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளார்.

பேச்சுவார்த்தை நடத்துவதே போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஒரே வழி எனவும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: