இ.போ.ச மற்றும் தனியார் பேருந்துகளின் போட்டி – ஊர்காவற்றுறை வீதியில் கோர விபத்து – நான்கு பேர் வைத்தியசாலையில் அனுமதி – சாரதிகள் இருவரும் பொலிசாரால் கைது!

Tuesday, January 23rd, 2024

யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை பகுதியில் இலங்கை போக்குவரத்து சபை பேருந்தும் தனியார் பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மூவர் சிறியளவான காயத்துடனும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்’ளார்.

இதேநேரம் பேருந்தின் சாரதிகள் இருவரும் ஊர்காவற்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று திங்கட்கிழமை காலை 6.30 மணியளவில் இரு பேருந்துகளும் போட்டிபோட்டு அதிவேகமாக சென்ற நிலையில்  பயணி ஒருவரை ஏற்றுவதற்காக இலங்கை போக்குவரத்து சபை பேருந்து வீதியில் சடுதியாக நிறுத்தப்பட்ட நிலையில் பின்னால் வேகமாக வந்த தனியார் பேருந்து மோதியுள்ளதாக இரு பேருந்தகளிலும் பயணித்தவர்கள் தெரிவித்தனர்.

இதன்போது இரண்டு பேருந்துகளும் பலத்த சேதத்திற்கு உள்ளானதுடன், காயமடைந்தவர்கள் நோயாளர் காவு வண்டி மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

சம்பவம் தொடர்பாக ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

இதேவேளை தனியார் போக்குவரத்து பேருந்துகள் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள் யாழ் மாவட்டத்தில் வீதிகளால் தமது சேவையை மேற்கொள்ளும்போது வீதியால் பயணிக்கும் ஏனைய மக்களையோ பேருந்துகளில் இருக்கும் பயணிகளையோ கருத்தில் கொள்ளாது போட்டிபோட்டு அதிவேகமாக பயணிப்பது அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள பொதுமக்கள் இதை தடுப்பதற்கு துறைசார் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: