இலங்கையும் புறக்கணித்தது: ஒத்திவைக்கப்பட்டது சார்க்’ மாநாடு!

Saturday, October 1st, 2016

பாகிஸ்தானில் நடக்கவுள்ள, ‘சார்க்’ மாநாட்டை, இலங்கையும் புறக்கணித்ததை அடுத்து, அந்த மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தெற்காசிய நாடுகளின் பிராந்திய கூட்டமைப்பு எனப்படும், ‘சார்க்’ அமைப்பில், இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், பூடான், நேபாளம், இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் மாலைதீலு உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ளன.

இந்த அமைப்பின் மாநாடு, அடுத்த மாதம், பாகிஸ்தானில் நடக்கவுள்ளது.ஜம்மு – காஷ்மீர் மாநிலம் யூரியில், இராணுவ முகாம் மீது, பாக்., பயங்கரவாதிகள், சமீபத்தில் நடத்திய தாக்குதலில், இராணுவ வீரர்கள், 19 பேர் பலியாகினர்.

இதற்கு, எதிர்ப்பு தெரிவித்து, பாகிஸ்தானில் நடக்கவுள்ள, சார்க் மாநாட்டை புறக்கணிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதேபோல், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பூடான் ஆகிய நாடுகளும், ‘மாநாட்டில் பங்கேற்கப் போவதில்லை’ என அறிவித்துள்ளன.இந்நிலையில், ‘பாகிஸ்தானில் நடக்கவுள்ள, சார்க் மாநாட்டில் பங்கேற்பதற்கான சூழல் நிலவவில்லை’ என, இலங்கை அரசு அறிவித்துள்ளது.

தெற்காசிய கூட்டமைப்பு நாடுகளின் வளர்ச்சிக்கு, கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள நாடுகளின் பங்களிப்பு மிக அவசியம். பாகிஸ்தானில் நடக்கவுள்ள, சார்க் மாநாட்டில் பங்கேற்பதற்கான சாதகமான சூழல் இல்லாதது வருத்தமளிக்கிறது என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான நாடுகளின் புறக்கணிப்பை அடுத்து, ‘சார்க்’ மாநாடு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

saarc

Related posts: