இலங்கையில் 11 ஆவது கொரோனா தொற்றாளர் மரணம் பதிவானது – சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு!

கொரோனா வைரஸ் தொற்றினால் இலங்கையில் 11 ஆவது மரணம் பதிவாகியுள்ளது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
குவைட்டில் இருந்து நாடு திரும்பி ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
இதேவேளை நேற்றும் நாட்டில் கொரோனா தொற்றுதியான 13 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டனர்.
இதனடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 633 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று கொரோனா தொற்றுறுதியானவர்களில் 9 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நான்கு பேர் கடற்படை சிப்பாய் என தேசிய தொற்று நோயியல் விஞ்ஞானப் பிரிவு அறிவித்துள்ளது.
இதேவேளை கொரோனா தொற்றுறுதியான மேலும் 20 பேர் நேற்று குணமடைந்துள்ளனர். இதனடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 801 ஆக அதிகரித்துள்ளது.
எவ்வாறாயினும் கொரோனா தொற்றுறுதியான 822 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 522 பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
அவர்களில் 330 பேர் குவைத்திலிருந்து நாடு திரும்பியுள்ளனர். அத்துடன் கட்டாரிலிருந்து நாடு திரும்பிய 150 பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது.
குவைத்திலிருந்து நாடு திரும்பியவர்களுக்கு முதற்கட்ட பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கட்டாரிலிருந்து நாடு திரும்பிய 270 பேருக்கு இதுவரையில் பி.சீ.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்
Related posts:
|
|