இலங்கையின் புகையிரத சேவை உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கு தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் உதவிகள் வழங்கப்படும் – இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவிப்பு!

Monday, September 20th, 2021

இலங்கையில் புகையிரத சேவை உட்கட்டமைப்பினை அபிவிருத்தி செய்வதற்கான இந்தியாவின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் அடிப்படையில் புகையிரத இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவைகள் (RITES) வரையறுக்கப்பட்ட நிறுவனத்தினால் விநியோகம் செய்யப்பட்ட 20 புகையிரத பெட்டிகள் அடங்கிய தொகுதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் 318 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் உதவியின் கீழான ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள 160 புகையிரத பெட்டிகளில் ஒரு பகுதியாகவே குறித்த புகையிரத பெட்டிகள் தற்போது கொழும்பை வந்தடைந்துள்ளன.  

இதேவேளை  இலங்கைக்கான 160 பெட்டிகளில் தற்போது வந்தடைந்துள்ள தொகுதியுடன் மொத்தமாக 60 புகையிரத பெட்டிகள் இதுவரை இலங்கைக்கு வழங்கப்பட்டிருக்கும் அதேவேளை மேலும் 20 பெட்டிகள் விரைவில் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்படுவதற்காக தயார் நிலையில் உள்ளதாகவும் இந்திய உயர் ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் இந்தியாவின் 318 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியின் கீழ் RITES நிறுவனமானது இலங்கை ரயில்வே திணைக்களத்திற்கு குளிரூட்டப்பட்ட வசதிகளுடனான டீசல் ரயில்கள் ) இரண்டை இலங்கைக்கு வழங்குவதற்கும் தீர்மானித்துள்ளது.

இதில் 13 பெட்டிகளடங்கிய முதலாவது குளிரூட்டப்பட்ட ரயில் இந்தியாவிலிருந்து அனுப்பப்படுவதற்கு தயார் நிலையில் உள்ளதுடன் குறித்த ரயிலை இலங்கைக்கு கொண்டுவருவதற்கான கப்பலை இலங்கை அரசாங்கம் பரிந்துரைக்கும்வரை காத்திருக்கின்றது எனவும் இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இந்த கடனுதவி திட்டத்தின் கீழ் மாஹோமுதல் ஓமந்தை வரையிலான (128 கி,மீ) ரயில் பாதை புனரமைப்பு, மாஹோ முதல் அனுராதபுரம் வரையிலான சமிக்கை வலையமைப்பு திட்டம், பொல்காவலைமுதல் குருநாகல் வரையிலான இரட்டை புகையிரத பாதை திட்டம் உள்ளிட்ட திட்டங்களும் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதேவேளை மற்றொரு கடனுதவி திட்டத்தின் கீழ் டீசலில் இயங்கும் 06 ரயில்களும்- டீசலில் இயங்கும் 10 ரயில்களும் இலங்கைக்கு வழங்கப்பட்டிருந்ததாகவும் இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

அத்துடன் இதுவரையில் 3.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான அபிவிருத்தி உதவி திட்டங்கள் இந்தியாவால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ள இந்திய துதரகம், இந்த உதவித் திட்டத்தின் கீழ் நன்கொடையாக வழங்கப்பட்ட திட்டங்கள் அதேபோல கடனுதவி அடிப்படையில் வழங்கப்பட்ட திட்டங்கள் ஆகியவை உள்ளடங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது

மேலும் இலங்கை மக்களாலும் அரசாங்கத்தினாலும் முன்னுரிமையளிக்கப்பட உள்ள திட்டமாக கருதப்படும் புகையிரத சேவை உட்கட்டமைப்பின் அபிவிருத்திக்கு விசேட கவனம் செலுத்தப்படுகிறது. இந்த அடிப்படையில் புகையிரதப் பாதைகளை புனரமைப்பு செய்தல்  சமிக்கை மற்றும் தொலைத்தொடர்பு பொறிமுறையை பொருத்துதல் கரையோர புகையிரத மார்க்கங்களை தரம் உயர்த்துதல் ஆகிய திட்டங்கள் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் ஏனைய பல்வேறு திட்டங்கள் அமுல்படுத்துவதற்கான பலதரப்பட்ட நிலைகளில் உள்ளதாகவும்  இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: