இலக்கினை வெற்றி கொள்ள இரவு பகல் பாராது அயராது உழைத்த நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்றி – வெற்றியை அமைதியாக கொண்டாடுங்கள் – பிரதமர் கோரிக்கை!

Friday, August 7th, 2020

நேற்றையதினம் நடந்துமுடிந்த பொதுதேர்தலுக்கான முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் பொது மக்கள் நாட்டின் பொதுச்சட்டம் மற்றும் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள சுகாதார பாதுகாப்பு வழிமுறைகள் ஆகியவற்றை முழுமையாக பின்பற்றி மக்கள் வெற்றியினை அமைதியாக கொண்டாட வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.

தனது உத்தியோகப்பூர்வ முகப்பு புத்தகத்தில் அவர் இந்த மேற்கண்டவாறு கோரிக்கையை விடுத்துள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

சவால்களை வெற்றிக் கொண்டு புதிய ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தவும், இலக்கினை வெற்றிக் கொள்ளவும் இரவு பகல் பாராது அயராது உழைத்த நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்.

குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்ட எனக்கு விருப்பு வாக்குகளை வரலாற்றில் என்றுமில்லாத அளவிற்கு வழங்கிய குருநாகல் மாவட்ட மக்களுக்கு மனதார நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ என்மீதும், எனது தரப்பினர் மீதும் கொண்டுள்ள நம்பிக்கையை பலப்படுத்தவும், செயற்படுத்தவும் தொடர்ந்து பொறுப்புடன் செயற்படுவேன் என்பதை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன். கிடைக்கப் பெற்றுள்ள அமோக வெற்றியை நாட்டு மக்கள் அனைவரும் பொது சட்டம், தற்போது அமுலில் உள்ள சுகாதார பாதுகாப்பு அம்சங்களை முழுமையாக பின்பற்றி எத்தரப்பினருக்கும் பாதிப்பு ஏற்படாமல் அமைதியாக கொண்டாட வேண்டும்.

தோற்றம் பெற்றுள்ள அனைத்து மட்ட சவால்களையும் வெற்றிக் கொண்டு சிறந்த அரச நிர்வாகத்தை முன்னெடுக்கவே மக்கள் எமக்கு ஆணையை வழங்கியுள்ளார்கள். கிடைக்கப் பெற்ற மக்களாணையை மதித்து சிறந்த ஆட்சியை முன்னெடுப்போம் எனவும் பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: