இருதரப்பு வர்த்தக, பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு ஈரானுக்கு வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ் அழைப்பு!

Thursday, September 9th, 2021

மேம்பட்ட இருதரப்பு வர்த்தகம், முதலீடு, சுற்றுலா மற்றும் ஆற்றல் உள்ளடங்கலான ஒத்துழைப்புக்கான சாத்தியக்கூறுகள் உள்ள புதிய துறைகளில் ஈரானுடனான அதிகரித்த பொருளாதார ஒத்துழைப்பை வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் நாடியுள்ளார்.

ஈரான் இஸ்லாமியக் குடியரசின் தூதுவர் ஹாஷேம் அஷ்ஜஸாதே வெளிநாட்டு அமைச்சில் சந்தித்த போதே அமைச்சர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

மேலும் இலங்கைக்கும் ஈரானுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவுகளை சுட்டிக்காட்டிய வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ் அண்மைய ஆண்டுகளில், உயர்மட்ட விஜயங்களை பரிமாறிக்கொள்வதன் மூலம் இருதரப்பு மட்டத்திலும் சர்வதேச அரங்கிலும் நெருக்கமான ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்புக்கு இருதரப்பு உறவுகள் பங்களித்தன என்றும் குறிப்பிட்டுள்ளார்..

அத்துடன் ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகள் மற்றும் ஏனைய பல்தரப்பட்ட அரங்குகளில் ஈரான் இஸ்லாமியக் குடியரசு நல்கிய உறுதியான ஆதரவுகளுக்கான இலங்கை அரசாங்கத்தின் பாராட்டுக்களை வெளிநாட்டு அமைச்சர் தெரிவித்திருந்தார்.

வெளிநாட்டு அமைச்சராகப் பதவியேற்ற அமைச்சர் பீரிஸுக்கு தூதுவர் அஷ்ஜஸாதே தனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், இலங்கை அரசாங்கத்துடன் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான ஈரான் அரசாங்கத்தின் உறுதியான அர்ப்பணிப்பையும் ஆதரவையும் உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே

கொழும்பில் உள்ள வியட்நாம் தூதுவர் ஹோ தி தன் ட்ரூக் வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸை மரியாதை நிமித்தம் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது இரு நாடுகளுக்கிடையேயான இராஜதந்திர உறவுகளை ஸ்தாபித்ததன் 50வது ஆண்டுவிழா 2020 இல் நடைபெற்றதனை நினைவுகூர்ந்த அதே வேளை, இலங்கை மற்றும் வியட்நாமுக்கு இடையே பரஸ்பரம் நன்மை பயக்கும் கூட்டணியை பாராட்டிய வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ், அரசியல், பொருளாதார மற்றும் கலாச்சாரத் தளங்ளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான நாட்டின் ஆர்வத்தை மீண்டும் வலியுறுத்தினார்.

2009இல் இடம்பெற்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வியட்நாமுக்கான உத்தியோகபூர்வ விஜயம் உட்பட இரு நாடுகளுக்கும் இடையேயான வழக்கமான உயர் மட்டத் தொடர்புகளையும் அவர் நினைவு கூர்ந்தார்.

அரசியல் உறவுகளில் அனைத்து நிலைகளிலும் கவனம் செலுத்துவதோடு, வர்த்தகம் மற்றும் முதலீடு, விவசாயம், மீன்வளம், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம், கல்வி, கலாச்சாரம் போன்ற துறைகளில் இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையேயான ஒத்துழைப்பின் பன்முகத் தன்மையை தூதுவர் ட்ரூக் விவரித்தார்.

சர்வதேச அரங்குகளில் வியட்நாமால் இலங்கைக்கு வழங்கப்பட்ட ஆதரவுகளுக்கு அமைச்சர் பீரிஸ் பாராட்டுக்களைத் தெரிவித்ததுடன், பரஸ்பரம் ஆர்வமுள்ள பகுதிகளில் ஒத்துழைப்பை வரவேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: