உதயன் பத்திரிகை அவதூறு வழக்கு ஒத்திவைப்பு!

Monday, May 15th, 2017

யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உதயன் பத்திரிகை நிறுவனத்திற்கு எதிராக மானநஷ்டஈடு கோரி ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் ஒன்று தொடர் விசாரணைக்காக மாவட்ட நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

யாழ். மாவட்ட நீதிபதி கௌரவ கஜநிதிபாலன் முன்னிலையில் குறித்த தொடர் விசாரணை இன்றையதினம்(15) நடைபெற்றது.

தனக்கு அவப்பெயரையும், களங்கத்தையும் ஏற்படுத்தும் வகையில் உதயன் பத்திரிகை நிறுவனத்தால் திட்டமிட்டு வெளியிடப்பட்ட செய்தி தொடர்பில் கட்சியின் டக்ளஸ் தேவானந்தாவினால் குறித்த பத்திரிகை நிறுவனத்திற்கு எதிராக ஆயிரம் கோடி ரூபா கோரி மானநஷ்ட வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இவ்வழக்கின் தொடர் விசாரணையானது இன்றையதினம் மாவட்ட நீதிபதி கௌரவ கஜநிதிபாலன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது டக்ளஸ் தேவானந்தா மன்றில் சாட்சியங்களை வழங்கினார்.

இதில் டக்ளஸ் தேவானந்தா சார்பில் சட்டத்தரணி ரெங்கன் பிரதிநிதித்துவப்படுத்தியிருந்த அதேவேளை, உதயன் பத்திரிகை நிறுவனம் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் குறுக்கு விசாரணை செய்தார். குறித்த வழக்கின் தொடர்  விசாரணை எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 04ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related posts: