இனங்காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கையின் இரு மடங்கிற்கு சமூகத்தில் தொற்றாளர்கள் இருப்பர் – யாழ் போதனா வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் எச்சரிக்கை!

Monday, August 23rd, 2021

சமூகத்தில் இனங்காணப்படும் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் இரண்டு மடங்கிற்கு சமூகத்தில் கொரோனாத் தொற்றாளர்கள் இருப்பரென யாழ் போதனா வைத்தியசாலை பிரதிப்பணிப்பாளரும் மருத்துவருமான யமுனாநந்தா தெரிவித்துள்ளார்.

கொரோனாத் தொற்றுத் தொடர்பான மருத்துவ புள்ளிவிபரவியல் விளக்கங்கள் தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

அவரது குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது –

கொரோனாத் தொற்றின் பரம்பலில் நோய் தொற்றியவர்களில் 40 முதல் 50 வீதமானோர் நோய்கிருமி தொற்றினும் நோய் அறிகுறிகளைக் காட்டாது சமூகத்தில் இருப்பர். எனவே சமூகத்தில் இனங்காணப்படும் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் இரண்டு மடங்கிற்கு சமூகத்தில் கொரோனாத் தொற்றாளர்கள் இருப்பர்.

கொரோனா நோயாளிகளின் சராசரி இறப்பு வீதம் 1.5 ஆக உள்ளது. எனவே தினமும் 180 பேர் கொரோனாத் தொற்றால் இறக்கும்போது 4 ஆயிரம் கொரோனாத் தொற்றுடன் நோயாளியாகக் காணப்படுவர்.

கொரோனாத் தொற்று அறிகுறி உடையவர்களில் 10 வீதமானோர் ஆபத்தான நிலையை அடையக்கூடும். எனவே தினமும் 400 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சையினைப் பெறுவர். அடுத்து சீனாவில் ஆரம்பத்தில் கண்டறியப்பட்ட கொரோனாத் தொற்றின் தொற்று வீதத்தைவிடத் தற்போது பரவும் டெல்டா திரிபின் தொற்றுவீதம் இரண்டு மடங்கு அதிகம்.

அத்துடன் கொரோனாத் தொற்றின் நோயின் தீவிரநிலையினை ஒருவரின் நோய் எதிர்ப்புச் சக்தியே தீர்மானிக்கின்றது. தடுப்பு மருந்துகள், நோய் எதிர்ப்புச்சக்தி உருவாகுவதில் உதவுகின்றன. கொரோனா மரணங்களில் 90 வீதத்திற்கு மேல் தடுப்பு மருந்து பெறாதவர்களாலேயே ஏற்படுகின்றது. அடுத்து வயதானவர்கள், ஈரல் நோயுடையோர், சிறுநீரக நோயுடையோர், சலரோக நோயுடையோரில் ஏற்படுகின்றது.

ஆய்வுகூடப் பரிசோதனைகளான பிசிஆர் சோதனை முடிவுகள் மட்டும் கொரோனா நோய்க்கான சிகிச்சையை தீர்மானிக்காது. ஒருவரில் செயற்திறன் அற்ற கொரோனா வைரஸ் உள்ளபோதும் குணமடைந்தவர்களிலும் பிசிஆர் முடிவுகள் கருத முடியாதவை. அவ்வாறே அன்டிஜன் பரிசோதனைகளும் முற்றுமுழுதாக நோய்த் தொற்றினை முழுமையாக வெளிப்படுத்தாது.

பொதுவாக நோய் தொற்றி 2 கிழமைகளில் கொரோனாத் தொற்று ஒருவரில் இருந்து பரவும் தன்மை அற்றுப் போகும்.

கொரோனா நோயாளிகளில் சளியில் 70 வீதமும் மூக்கு நீரில் 60 வீதமும் எச்சிலில் 30 வீதமும் மலத்தில் 30 வீதமும் குருதியில் 1வீதமும் கிருமிகள் பிசிஆர் பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தப்படலாம்.

பொதுவாக கொரோனாத் தொற்று தும்மும் போதும், இருமும் போதும் நோயாளியில் இருந்து அதிகம் பரவும். இதனாலேயே முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி பேணல் மிகவும் முக்கியமானது. ஒருவரைச் சூழ அவரது குடும்பமும், அவர் வேலை செய்யும் சூழலும் உள்வட்டமாக உள்ளது. அதனைச் சூழ வெளிவட்டமாகச் சமூகம் உள்ளது. வெளிவட்டத்தில் தொற்றுத் தீவிரமாக உள்ளபோது சமூக முடக்கத்தினைச் சிறப்பாகப் பேணினால் உள்வட்டத்தில் கொரோனாத் தொற்று ஏற்படாது.

கொரோனாத் தொற்றுத் தொடர்பான அடிப்படை மருத்துவப் புள்ளிவிபரவியல் அறிவானது கொரோனாத் தொற்றைச் சமூகமட்டத்தில் கட்டுப்படுத்துவதற்கு இன்றியமையாதது ஆகுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: