இந்திய கடனை இலங்கை ரூபாவில் மீள செலுத்துவதற்கு இணக்கம் – பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Thursday, May 26th, 2022

இந்தியாவினால் மருந்துகள் கொள்வனவிற்காக வழங்கப்படும் கடனை, இலங்கை ரூபாவிலேயே மீள செலுத்துவதற்கு இணக்கம் வெளியிடப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் டொலர் பற்றாக்குறை நீடிக்கும் நிலையில், இந்தியாவுடன் இடம்பெற்ற பேச்சுக்களின் பின்னர், இந்தியா அதற்கு இணங்கியுள்ளது. இதேவேளை பிரெஞ்சு அரசாங்கத்தினால் இலங்கைக்கு நாளை வழங்கப்படவுள்ள மருந்துகளின் பாவனையுடன் 90 நாட்கள் சத்திரசிகிச்சையை மேற்கொள்ள முடியும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையில் இதுவரை 76 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் அறிக்கையிட்டுள்ளது.

உள்ளூர் மருந்து விநியோகத்தர்களுக்கும் 33 பில்லியன் இலங்கை ரூபாய்கள் செலுத்த வேண்டிய நிலை காணப்படும் நிலையில், மருத்துவத்துறை நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றது.

இந்த நிலையிலேயே அத்தியாவசிய மருந்துகள் மற்றும் இலங்கையில் பற்றாக்குறையாக உள்ள மருந்துகள் குறித்த அறிக்கையை வழங்குமாறு சுகாதார அமைச்சுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியினால் ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாட்டிற்கு குறுகிய கால மற்றும் நடுத்தர கால தீர்வுகள் குறித்து கலந்துரையாடுவதற்காக ரணில் விகரமசிங்க தலைமையில்  பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கடன் வசதியால் இலங்கைக்கு கிடைக்கபெறும் 200 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு டொலர்கள் கிடைக்காத காரணத்தினால், கடனை இலங்கை ரூபாவில் செலுத்துவதற்கு, இந்தியாவுடனான கலந்துரையாடலின் போது இணக்கம் தெரிவிக்கப்பட்டதாக பிரதமர் ரணில் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் பிரான்ஸ் அரசாங்கத்தினால் நாளை வழங்கப்படவுள்ள மருந்துகள் மற்றும் மயக்க மருந்துகளின் கையிருப்புகளின் அடிப்படையில் நாட்டிலுள்ள அனைத்து அவசர சத்திரசிகிச்சை நிலையங்களிலும் தொடர்ந்து 90 நாட்கள் சத்திரசிகிச்சையை மேற்கொள்ள முடியும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இந்த கலந்துரையாடலின் போது தெரிவித்தார்.

இந்த நிலையில், இலங்கையின் சுகாதார துறைக்கு உதவும் வகையில், அத்தியாவசிய மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது 

000

Related posts:

கொரோனா தொற்று நோயாளர்கள் என்று சந்தேகிக்கப்படும் 29 நோயாளர்கள் 15 வைத்தியசாலைகளில் அனுமதி - தேசிய த...
வடக்கில் அனைத்து சந்தைகளின் வியாபார நடவடிக்கைகளும் மீள ஆரம்பம் - வவுனியாவில் திருமண வைபவங்களுக்கு தட...
நாடாளுமன்ற அமர்வுகள் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை ஒத்திவைப்பு - தேவை இருந்தால் கட்சித் தலைவர்கள் கூடி...