ஆபத்து நிலைமை அடையாளம் காணப்பட்ட சந்தர்ப்பத்தில் அனுமதி கிடைக்கவில்லை – எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சர்ச்சைத் தகவல்!

Thursday, May 27th, 2021

கொழும்பு துறைமுகத்திலிருந்து 9.5 கடல் மைல் தொலைவில் தீப்பற்றி எரியும், எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல், கொழும்பு துறைமுகத்துக்கு பிரவேசிக்க முன்னதாக இந்தியா மற்றும் கட்டார் ஆகிய நாடுகளிலுள்ள இரு துறைமுகங்களுக்குள் பிரவேசிக்க முயற்சித்துள்ளது.

எனினும், மேற்படி இரண்டு துறைமுகங்களுக்குள் பிரவேசிக்க இக்கப்பலுக்கு அனுமதியளிக்கப்பட்டிருக்கவில்லை.

இந்த கப்பலில் ஏற்றிச்செல்லப்பட்ட இரசாயன திரவியம் கசிந்ததால் இந்த தீ ஏற்பட்டதாக எக்ஸ்பிரஸ் பேர்ல் நிறுவனத்தின்,  நிறைவேற்றுப் பணிப்பாளர் டிம் ஹார்ட்னொல் (Tim Hartnoll) தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும்போது, அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த கப்பலில் ஏற்றிச்செல்லப்பட்டிருந்த 1486 கொள்கலன்களில், 25 டொன் நைட்ரிக் அமிலம்  அடங்கிய பல கொள்கலன்களும் காணப்பட்டுள்ளன.

இந்த கொள்கலன்கள் முறையாக களஞ்சியப்படுத்தப்படாமையே இந்த தீ ஏற்படுதற்கான காரணம் என ஹார்ட்னொல் தெரிவித்துள்ளார்.

ஆபத்து நிலைமை அடையாளம் காணப்பட்ட சந்தர்ப்பத்தில், இந்தியாவின் மேற்கு பகுதியிலுள்ள ஹசீரா துறைமுகத்திற்குள் பிரவேசிப்பதற்காக அனுமதி கோரப்பட்டிருந்தது.

எனினும், ஹசீரா துறைமுகத்தினால் இந்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கவில்லை. அதனையடுத்து, கட்டாரிலுள்ள ஹாமட் துறைமுகத்துக்குள் இந்தக் கப்பல் பிரவேசிக்க முயற்சி கோரிய போதிலும், அக்கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது.

அதன்பிறகு, அக்கப்பல் தனது அடுத்த பிரயாண இலக்கான இலங்கை நோக்கி பயணத்தை ஆரம்பித்தது.

எனினும், கொழும்பு துறைமுகத்துக்கு பிரவேசிக்க அனுமதி கோர முன்னதாகவே கப்பலில் தீ ஏற்படுவதற்கான ஆபத்து நிலைமை தோன்றியிருந்ததாக நிறுவனத்தின் பணிப்பாளர் ஒப்புக்கொண்டுள்ளார்.

அவர் இது குறித்து மேலும் கூறுகையில், கப்பல் முன்னதாக அனுமதி கோரியிருந்ததற்கு இணங்க, இந்தியாவில் அல்லது கட்டாரில் உள்ள துறைமுகங்கள் ஒன்றில் அனுமதி வழங்கப்பட்டிருக்குமானால் இந்த பாரிய அழிவிலிருந்து தப்பிக்க முடியுமானதாக இருந்திருக்கும் எனத் தெரிவித்தார்.

இதேவேளை, வர்த்தக கப்பல்களை காப்புறுதி செய்யும், லண்டனிலுள்ள பீ என்ட் ஐ கிளப் (P&I Club) காப்புறுதி நிறுவனம் அண்மையில் விடுத்த அறிக்கையொன்றுக்கமைய, ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கு ஒரு முறையும், உலகின் ஏதாவதொரு இடத்தில் வர்த்தக கப்பல் ஒன்று தீப்பற்றுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தீ ஏற்படுதற்கான மூன்று பிரதான காரணங்களை அந்நிறுவனம் வெளியிட்டிருந்தது.

நிலக்கரியை ஏற்றிச் செல்லும்போது ஏற்படக்கூடிய அதிக வெப்பத்தினால் ஏற்படும் தீ, இரசாயன பொருட்களை முறையாக களஞ்சியப்படுத்தமையினால் ஏற்படும் தீ மற்றும் பற்றரிகளை கொண்டு செல்லும்போது ஏற்படக்கூடிய வெப்பத்தினால் ஏற்படும் தீ என வகைப்படுத்தியுள்ளது.

கடந்த ஜனவரி 28 ஆம் திகதி நிர்மாணப் பணிகள் பூர்த்தியாகிய எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல், கடந்த ஏப்ரல் 3 ஆம் திகதி தனது முதல் பயணத்தை ஆரம்பித்திருந்தது.

சிங்கப்பூரின் எக்ஸ்ப்ரஸ் கப்பல் சரக்கு போக்குவரத்து நிறுவனத்துக்கு சொந்தமான எக்ஸ்ப்ரஸ் பேர்ல் தனது மூன்றாவது வர்த்தக பயணித்தின் போது இவ்வாறு தீப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

00

Related posts:

நாட்டில் அடுத்த சில வாரங்களுக்குள் டெங்கு நோயாளர் எண்ணிக்கையும் அதிகரிக்கும் - தேசிய டெங்கு கட்டுப்...
அமைச்சரின் அகவை நாளை முன்னிட்டு கட்சியின் ஆதரவாளர்களால் பல்வேறு நலத்திட்டங்கள் முன்னெடுப்பு!
அமைச்சர்களான விமல் மற்றும் கம்மன்பில பதவி நீக்கம் - அரசாங்கத்தின் 11 பங்காளிக் கட்சிகளின் நிலைப்பாட...