டெங்கு நோய் – ஒழிப்பதற்கான சட்டங்கள் வலுப்படுத்தப்பட்டுள்ளன!

Monday, June 19th, 2017

டெங்கு நோயை ஒழிப்பதற்கான சட்டங்கள் வலுப்படுத்தப்பட்டுள்ளன என்று சுகாதார போஷாக்கு மற்றும் சுதேசிய வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

சுகாதாரப் பரிசோதகர்களுக்கு எத்தகைய பகுதிகளிலும் பிரவேசிப்பதற்கான அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.டெங்கு நுளம்புகள் பரவக் கூடிய வகையில் சுற்றாடலை வைத்திருக்கும் நபர்களுக்கு எதிராக 5 ஆயிரம் ரூபாவிலிருந்து 25 ஆயிரம் ரூபா வரையில் தண்டப் பணம் அறவிடப்படும்.

ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்ற விசேட பேச்சுவார்த்தையின் போது இது தொடர்பில் கூடுதலான கவனம் செலுத்தப்பட்டது. அத்துடன் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நிலவும் காலநிலைக்கு மத்தியில் டெங்கு நோய் பரவும் அபாயம் அதிகரத்துள்ளது. எதிர்வரும் 2 மாதங்கள் மற்றும் ஒக்டோபர் மாதத்திலிருந்து டிசம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் டெங்கு மேலும் அதிகரிக்கக்கூடும். இதனால், இது தொடர்பில் கூடுதலான கவனம் செலுத்த வேண்டுமென்றும் அமைச்சர் கூறினார்.டெங்கு நோய் பரவுவதைத் தடுப்பதற்காக நவீன தொழில்நுட்ப முறையைப் பயன்படுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக அவுஸ்திரேலிய பல்கலைக்கழகத்துடன் இணைந்து டெங்கு ஒழிப்புக்கான பக்டீரியா ஒன்றை நாட்டில் விரிவுபடுத்துவதற்கான வேலைத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

ஜுலை மாதத்தில் நாட்டிற்கு விஜயம் செய்யவுள்ள அவுஸ்திரேலிய வெளிநாட்டு அமைச்சருடன் இது தொடர்பாக புரிந்துணர்வு உடன்படிக்கையொன்று மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.சுகாதாரப் பணிப்பாளர் நாயகத்தின் தலைமையில் டெங்கு நோய் ஒழிப்பு விசேட குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. தலங்கம, பிலியந்தலை, களுபோவில வைத்திய சாலைகளை ஐ.டி.எச் வைத்தியசாலையுடன் ஒன்றிணைத்து நடத்துவதற்கும் எதிர்பார்க்கப் பட்டுள்ளது. இதேபோன்று நீர்கொழும்பு வைத்தியசாலை மற்றும் ஏனைய வைத்தியசாலைகளில் உள்ள டெங்க நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு புதிய திட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென்றும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறினார்.

Related posts: