அரசாங்கத்துடன் இணைய முன்வருபவர்களுக்கு எனது அமைச்சை வழங்கத் தயார் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அறிவிப்பு!

Saturday, May 21st, 2022

நாடு ஜனநாயக ரீதியிலேயே முன்னெடுக்கப்படவேண்டுமே தவிர அச்சுறுத்தி அல்லது வேறு விதத்தில் நாட்டை முன்னெடுத்துச் செல்வதற்கு இடமளிக்க முடியாது என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க  தெரிவித்துள்ளார்.

9 ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற கலவரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் –

மக்கள் கருத்துக்கு செவிசாய்க்க வேண்டும். எனினும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ள சில ஆயிரக்கணக்கானவர்களுக்காக அரசியலமைப்பை மீறி செயற்பட முடியாது.  69 இலட்சம் மக்கள் வாக்களித்து ஜனாதிபதியை தெரிவு செய்துள்ளனர்.

கடந்த 9ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற சம்பவங்களை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.  குற்றவாளிகள் இனங்காணப்பட்டு அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாம் உறுதியாக வுள்ளோம்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, பொதுஜன பெரமுன கட்சி ஒருபோதும் படுகொலை மூலம் அரசியல் செய்யும் கட்சிகள் அல்ல.

எனினும் ஐக்கிய தேசியக் கட்சி ஜே்வி.பி போன்ற கட்சிகள் படுகொலை மூலம் அரசியல் நடத்திய வரலாறுகள் உள்ளன. 88 மற்றும் 89  காலங்களில் அரசியலுக்காக மக்கள் கொலை செய்யப்பட்டனர்.

ஜே.வி.பி கிளர்ச்சி காலத்தில் மிக மோசமான படுகொலைகள் நடைபெற்றன. நாட்டின் நெருக்கடி நிலைக்கு தீர்வு காண்பதற்காக அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும் என்ற தீர்மானத்தில் நாம் எதிர்க் கட்சிக்கு அழைப்பு விடுத்தோம்.

ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நிபந்தனைகளைப் போட்டு அதிலும் அரசியல்  இலாபம் தேட முனைந்தார்.

இப்போதும் அரசாங்கத்தில் இணைந்து அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்க யாரும் முன் வந்தால் நான் எனது அமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்க தயாராக உள்ளேன். இந்த நாடு ஜனநாயக ரீதியாக கட்டியெழுப்பப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: