அமைச்சர் நாமல் எண்ணக்கருவான இளைஞர் வணிகக் கிராமம் திட்டத்துக்கு கிளிநொச்சி மாவட்டம் தெரிவு – அமைச்சர் டக்ளஸின் முயற்சிக்குப் பலன்!

Thursday, May 20th, 2021

இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் எண்ணத்தில், பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள இளைஞர் வணிகக் கிராமம் நிகழ்ச்சித் திட்டத்துக்கு கிளிநொச்சி மாவட்டம் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்துக்கென முதல் கட்டமாக தெரிவுசெய்யப்பட்ட இலங்கையின் 3 மாவட்டங்களில் கிளிநொச்சி மாவட்டத்தையும் உள்ளடக்குவதற்கு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத் தலைவரும், கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட முயற்சிகள் இதன்மூலம் பலனளித்துள்ளது. 

இலங்கையின் 25 மாவட்டங்களிலும், அந்தந்த மாவட்டங்கள், பிரதேச செயலக பிரிவுகளில்  இருக்கக்கூடிய வளங்களை முதன்மைப்படுத்தி, அந்தந்த மாவட்ட இளைஞர்களுக்கு, அவர்கள் வாழும் மாவட்டங்களிலேயே வேலைவாய்ப்பை வழங்கி மாவட்டத்தினதும், நாட்டினதும் உள்நாட்டு உற்பத்திக்கான பங்களிப்பை உயர்த்தும் நோக்கில் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது.

தொழிற்பேட்டைகளை பொதுவாக நாட்டின் ஒரு பகுதியில் ஆரம்பித்துவிட்டு இளைஞர்களை அவை அமைந்துள்ள இடங்களை நோக்கி வேலைவாய்ப்புக்கு ஈர்ப்பதைவிட, அந்தந்த மாவட்டங்களின் பொருளாதார வளங்களின் அடிப்படையில் அங்கேயே தொழிற்பேட்டைகளை உருவாக்குமாறு முதலீட்டாளர்களை ஊக்குவிப்பது அமைச்சர் நாம ல் ராஜபக்ஷவின் இந்தத் திட்டத்தின் அடிப்படை அம்சமாகும்.

அவ்வாறு தொழில் முயற்சிகள் அந்தந்த மாவட்டங்களின் பொருளாதார வளங்களை அடிப்படையாகக் கொண்டு ஆரம்பிக்கப்படும்போது, அதற்குத் தேவையான தொழில் திறன் பயிற்சிகளை வழங்கி, அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்களை அங்கேயே வழங்க முடியும் என்பது அவரது முன்மொழிவவாக உள்ளது.

அவரது இந்த யோசனை, மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மகிந்த ராஜபக்ஷ ஆகியோரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் வேலைத்திட்டத்தின்கீழ் அது உள்வாங்கப்பட்டிருந்தது.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைந்தளவு பங்களிப்பை வழங்கும் மாவட்டங்கள் சிலவற்றை முதற்கட்டமாக இதற்குத் தெரிவுசெய்வது என்ற முடிவின் அடிப்படையில் மொனராகல, பொலனறுவை மற்றும் கிளிநொச்சி ஆகிய 3 மாவட்டங்கள் முதலில் தெரிவுசெய்யப்பட்டுள்ளன.

அத்துடன் ஜனாதிபதி செயலணியின் பிரதான வழிநடாத்தல் அதிகாரி நிஹால் சோமவீர அவர்களால் இந்தத் திட்டம் ஒருங்கிணைக்கப்படும் இந்தத் திட்டத்தைச் செயற்படுத்துவதற்கென கிளிநொச்சி மாவட்டத்தில் 200 ஏக்கர் காணியையும், திட்டத்தின்மூலம் தொழில்வாய்ப்புப் பெறும் இளைஞர்களின் குடும்பங்களை குடியேற்றுவதற்கென அதற்கருகாக 20 ஏக்கர் காணியையும் அடையாளப்படுத்துமாறு, பிரதம அமைச்சரின் மேலதிக செயலாளரும், பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் இணைச் செயலாளருமான அன்டன் பெரேரா கிளிநொச்சி மாவட்டச் செயலாளரிடம் கோரியுள்ளார்.

இதன்படி, கிளிநொச்சி மாவட்டத்தின் பிரதான பொருளாதார செயற்பாடுகளாக இருக்கும் விவசாயம், கடற்றொழில் ஆகியவற்றுக்கு முதன்மையளிக்கும் வகையில் இதற்கான காணிகளை, கரைச்சி பூநகரி பச்சிலைப்பள்ளி ஆகிய இடங்களில் அடையாளப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மாவட்டச் செயலாளர் ரூபாவதி கேதீஸ்வரன் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: