மத்தியஸ்தர் சபையில் உள்ளோருக்கு வெளிநாடுகளில் பயிற்சி !

Wednesday, November 29th, 2017

காணி குறித்தான விசேட மத்தியஸ்த சபையில் உள்ளவர்களுக்கு வெளிநாட்டுப் பயிற்சிகள் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டுமென ஐரோப்பிய ஆணைக்குழு அதிகாரிகளிடம் மத்தியஸ்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ். செயலகத்தில் கடந்த வார இறுதியில் யாழ். மாவட்ட காணி தொடர்பான விசேட மத்தியஸ்தர்களை ஐரோப்பிய ஆணைக்குழு அதிகாரிகள் சந்தித்து பேசிய போதே மேற்கண்ட கோரிக்கை மத்தியஸ்தர்களால் முன்வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் காணி தொடர்பான விசேட மத்தியஸ்த சபைக்கு பொருத்தமான கட்டடம் மற்றும் தளபாட வசதி செய்து தரப்படுவதுடன் பிணக்குகளுக்கு வருபவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்தல், காலத்துக்கு காலம் மனித உரிமைகள், காணிகள், காணி நிர்வாகம் தொடர்பான தொடர்பயிற்சிகள் வழங்கப்படல் வேண்டுமென கோரப்பட்டது.

மேலும் சனசமூக மத்தியஸ்த சபை தவிசாளர்களுக்கு லப்டொப் கணினி, புரஜெக்டர், பக்‌ஷ், போட்டோ கொப்பி இயந்திரம் வழங்குவதுடன் மத்தியஸ்தர்களின் கொடுப்பனவு அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தனர். இந்நிலையில் ஐரோப்பிய ஆணைக்குழு சிரேஸ்ட ஆலோசகர் எஸ்.கீதபொன்கலன் தெரிவித்ததாவது;

இலங்கைக்கு 40 மில்லியன் யூரோ நிதி நன்கொடையாக வழங்கவுள்ளோம். இதில் உள்ளூராட்சி சபைகளின் அபிவிருத்தி மத்தியஸ்த (காணி) சபை மற்றும் சனசமூக மத்தியஸ்த சபைகளின் அபிவிருத்திப் பயிற்சி மற்றும் விடயங்களுக்கும் பால்நிலை சமத்துவம் ஆகியவற்றுக்காக வழங்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.

Related posts: