பண்டத்தரிப்பு பெண்கள் கால்பந்தாட்ட அணி களமிறங்கப் பாடசாலை நிர்வாகம் அனுமதி!

Sunday, March 4th, 2018

பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப் பாடசாலையின் கால்பந்தாட்ட அணி தொடர்ந்தும் ஆட்டங்களில் பங்குபற்றும். அந்த அணிக்கு விதிக்கப்பட்ட தடை கைவிடப்படுகிறது என்று பாடசாலையின் அதிபர் திருமதி தேவராஜா நேற்று தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்ட விளையாட்டுச் சங்கம் நடத்திய வடமாகாண ரீதியிலான கால்பந்தாட்டத் தொடரில், கடந்த 19 ஆம் திகதி நடைபெற்ற இறுதியாட்டத்தில் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி அணியை எதிர்த்து பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப் பாடசாலை அணி மோதுவதாக இருந்தது. ஆட்டத்தில் பண்டத்தரிப்பு பெண்கள் அணி களமிறங்காததை அடுத்து மகாஜன கிண்ணம் வென்றது. மாகாண மட்டக் கால்பந்தாட்டத் தொடரின் இறுதியாட்டத்துக்குத் தகுதிபெற்ற ஓர் அணி அதில் களமிறங்காதமை அதிர்வலைகளைத் தோற்றுவித்தது. வலயக் கல்விப் பணிப்பாளர் பாடசாலை நிர்வாகத்திடம் பாடசாலையிக் கல்வியடைவு தொடர்பில் கலந்தாலோசித்தமையின் பின்னணியில் அணி களமிறக்கப்படவில்லை என்று தெரியவந்தது.

இதையடுத்து வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளருடன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தொடர்புகொண்டு கேட்டபோது பாடசாலையில் தாம் என்னென்ன விளையாட்டுக்களில் ஈடுபட வேண்டும் என்பதை அந்தந்தப் பாடசாலைகளே முடிவு செய்ய வேண்டும். அது அவர்களின் விருப்பம். ஆனால் அவர்கள் என்ன விளையாட்டுக்களில் பங்கெடுத்தாலும் அது அந்தப் பாடசாலைக்கு என்று வழங்கப்பட்ட உடற்கல்விப் பொறுப்பாசிரியரூடாகவே மேற்கொள்ளப்படல் வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இதையடுத்தே தமது அணியை மீண்டும் அனுமதிக்க பாடசாலை நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் வீராங்கனைகளின் பெற்றோரிடம் பாடசாலை நிர்வாகம் கேட்டிருந்த அவகாசத்தின் இறுதிநாள் நேற்றாகும். இதையடுத்தே பாடசாலை அதிபருடன் நேற்று தொடர்பு கொண்டு கேட்டவேளையில் அவர் தமது அணிக்கு அனுமதி வழங்கப்படும் என்று தெரிவித்தார். வலயக் கல்விப் பணிப்பாளரின் அறிவித்தலுக்கமைய பயிற்சி எடுக்கும் நேரங்கள் வழங்கவுள்ளோம். அதனடிப்படையில் எமது அணி தொடர்ந்தும் பயிற்சி எடுத்து ஆட்டங்களில் கலந்து கொள்ளும் என அவர் மேலும் தெரிவித்தார்.

கால்பந்தாட்ட இணைப்பாளர் வரவேற்பு

பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தர பாடசாலை கால்பந்தாட்ட அணி மீண்டும் ஆட்டங்களில் பங்கேற்கும் முடிவுக்கு, யாழ்ப்பாண மாவட்ட பாடசாலைகள் கால்பந்தாட்ட இணைப்பாளர் காந்தரூபன் வரவேற்புத் தெரிவித்தார். பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தர பாடசாலை கால்பந்தாட்ட அணி குறுகிய காலத்தில் கால்பந்தாட்டத்தில் வளர்ச்சி கண்டுவரும் அணியாகும். கடந்த ஆண்டு நடைபெற்ற இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான கால்பந்தாட்டத் தொடரில் தமது திறமைகளை வெளிக்காட்டியதோடு தற்போது நடைபெற்ற சமபோசா கிண்ணத்துக்கான தொடரில் சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்தது. எனவே அவர்களின் சாதனைப் பயணம் தொடர வேண்டும் என அவர் தெரிவித்தார்.

Related posts: