கைதியை தவறுதலாக சுட்டுக்கொன்ற முன்னாள் ராணுவ அதிகாரிக்கு சிறை!

Wednesday, August 31st, 2016

தமிழ் கைதி ஒருவர் மீது கவனக் குறைவாக துப்பாக்கிச் சூடு நடத்தி, அவரை கொன்றதாக, குற்றச்சாட்டுக்கு உள்ளான முன்னாள் ராணுவ அதிகாரி ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனை விதித்தது. அத்துடன், 20 லட்சம் ருபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.

விமல் விக்கிரமகே எனும் முன்னாள் ராணுவ லெப்டினலுக்கு எதிராக நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியது. அரசு தரப்பின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கருத்து தெரிவித்த போது 1998-ஆம் ஆண்டு யாழ் பருத்தித்துறை ராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ரொபட் வோலிண்டன் எனும் கைதி தப்பியோட முயற்சித்த போது சந்தேக நபர் கவனக் குறைவான முறையில் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டின் காரணமாக அந்த கைதி மரணமடைந்துள்ளதாக அறிவித்தார்.

ஆனால், இந்த குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாக தெரிவித்த எதிர் தரப்பின் வழக்கறிஞர் சந்தேக நபரை விடுதலை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தார். தீர்ப்பை அறிவித்த நீதிபதி சந்தேக நபருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் சந்தேகமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

இதன்படி சந்தேக நபருக்கு பத்து ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு ஆண்டு சிறை தண்டனை வழங்கிய நீதிபதி, இறந்த கைதியின் உறவினர்களுக்கு 20 லட்சம் ருபாய் இழப்பீடை பெற்றுக் கொடுக்குமாறு உத்தரவிட்டார். இந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய உள்ளதாக சந்தேக நபர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.

Related posts: