கடும் பாதுகாப்புக்கு மத்தியிலும் யாழ்ப்பாணத்தில் வாள் வெட்டு குழு அட்டகாசம்!

Monday, April 29th, 2019

நாட்டிலேற்பட்ட அசாதாரண சூழ்நிலையினால் நாடு முழுவதிலும் பலத்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள போதிலும், யாழ்ப்பாணத்தில் இளைஞனொருவர் மீது வாள் வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம்- சாவகச்சேரி, தம்புத்தோட்டம் படை முகாமுக்கு அருகிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.  

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த மிருசுவில் கெற்போலி மேற்கை சேர்ந்த கனகரத்தினம் நிரோசன் (வயது 21) யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது –

தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் நேற்றைய தினம் சாவகச்சேரி நகருக்கு சென்று, மீண்டும் கச்சாய் வீதி வழியாக மோட்டர் சைக்கிளில் வீடு திரும்பியுள்ளார்.

இதன்போது, தம்புத்தோட்டம் படை முகாமிலிருந்து சுமார் 100 மீற்றர் தூரத்தில் நின்ற இனந்தெரியாத குழுவொன்று இளைஞனை வழி மறித்து சரமாரியாக தாக்கி, வாளினால் வெட்டி காயப்படுத்தி விட்டு தப்பி சென்றுள்ளது.

குறித்த தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞனை வீதியால் சென்றவர்கள் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை யாழ்.பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Related posts: