கடற்படை படகு –  மீனவப் படகு விபத்து: ஒருவர் பலி!

Monday, October 2nd, 2017

காரைநகர் கடற்பரப்பில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற படகுடன் கடற்படையின் படகு மோதி விபத்துக்குள்ளானதில் ஒரு மீனவர் உயிரிழந்ததுடன் மற்றொரு மீனவர் படுகாயமடைந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காரைநகர் கடற்பரப்பில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில், காரைநகர் – வெடியரசன் வீதிப் பகுதியைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை கேதீஸ்வரன் (வயது 38) என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார். மேலும், அதே பகுதியைச் சேர்ந்த தவராசா சத்தியராஜா இதன்போது படுகாயமடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, காரைநகர் – வெடியரசன் வீதியைச் சேர்ந்த இரு மீனவர்கள் நேற்று இரவு காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். அப்போது, ஒருவர் கடலில் வலையை வீசிக்கொண்டிருந்துள்ளார்.

மற்றையவர் படகில் இருந்துள்ளார். அப்போது குறித்த படகும், அங்கு வந்த கடற்படையினரின் படகும் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, இரு மீனவர்களும் கடலில் விழுந்த நிலையில், கணபதிப்பிள்ளை கேதீஸ்வரன் உயிரிழந்துள்ளார். மற்றைய மீனவரான தவராசா சத்தியராஜா படுகாயமடைந்துள்ளார். சம்பவம் தொடர்பாக ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts: