வெல்லுகின்ற பக்கத்தில் அணி சேர்வது சாணக்கியமல்ல – நாம் தீர்மானித்த பக்கத்தை வெல்லச் செய்வதே அரசியல் சாணக்கியமாகும் – மீண்டும் ஒருமுறை தமிழ் மக்களின் அரசியல் பலம் வீணடிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Thursday, July 21st, 2022

துரதிஷ்டவசமாக தமிழ் மக்களின் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றவர்களாக இருப்பவர்கள், தமது தவறான தீர்மானங்களால் மீண்டும் ஒருமுறை தமிழ் மக்களில் அரசியல் பலத்தை வீணடித்துள்ளார்கள் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

புதிய ஜனாதிபதி ரணிலுக்கான வாழ்த்துச் செய்தியிலேயே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

இலங்கை அரசியல் நெருக்கடிகளையும், பொருளாதார நெருக்கடிகளையும் எதிர்கொண்டுள்ள நிலையில் நாட்டுக்கு தலைமை தாங்கி நாட்டை சரியான திசை வழியில் நடத்திச் செல்லக் கூடியவர், ரணில் விக்ரமசிங்க தான் என்பதை நாம் நேர்மையாகவும், துணிச்சலோடும் அன்று கூறியிருந்தோம்.

இதேநேரம் வெல்லுகின்ற பக்கத்தில் அணி சேர்வது அரசியல் சாணக்கியமல்ல. நாம் தீர்மானித்த பக்கத்தை வெல்லச் செய்வதே அரசியல் சாணக்கியமாகும். அந்த வகையில் எமது அனுபவமும், தீர்மானங்களும் அரசியல் சாணக்கியமானது என்பதை நாம் ஆதரித்த அதிபர் வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவின் மகத்தான வெற்றி மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியானது பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை வெற்றிபெறச் செய்யும் வெற்றியாக அமையும்.

இந்நிலையில், எமக்கான ஆதரவினை எமது மக்கள் இன்னும் அதிகமாக வழங்குவார்களாயின், மேலும் பல விடயங்களை சாத்தியமானதாக்க எம்மால் முடியும்”

இதேவேளை தற்போது நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டிய கடமைப் பொறுப்பை செய்வதற்கு நாம் அனைவரும் கட்சி அரசியலுக்கு அப்பால் ஒருமித்து செயலாற்ற வேண்டிய காலகட்டத்தில் இருக்கின்றோம்.

இவ்வாறான அரசியல் சூழலில் தமிழ் மக்களின் அரசியல் பலத்தை அர்த்தமுள்ள வகையிலும் தமிழ் மக்களின் கெளரவமான எதிர்காலத்தையும் ஆழமாக ஆராய்ந்து, பொருத்தமான தீர்மானங்களை எடுக்கவேண்டும்.

ஆனால் துரதிஷ்டவசமாக தமிழ் மக்களின் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றவர்களாக இருப்பவர்கள் தமது தவறான தீர்மானங்களால் மீண்டும் ஒருமுறை தமிழ் மக்களின் அரசியல் பலத்தை வீணடித்துள்ளார்கள்.

ஆனாலும் நாம் எப்போதும் தீர்க்கதரிசனமான தீர்மானங்களையே எடுத்திருக்கின்றோம். எமது தேசிய நல்லிணக்க அரசியல் முன்னெடுப்புக்களானது தமிழ் மக்களின் சமத்துவமான எதிர்காலத்தை வென்றெடுப்பதற்கும், தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள அனைத்துவகை பிரச்சினைகளுக்கும் தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதற்கும் வழியேற்படுத்தும் என்பதே எமது அரசியல் தீர்மானங்களின் அடிப்படையாகும் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை சேவையில் ஈடுபடும் பேருந்துகள் தொடர்பிலான இடர்பாடுகளுக்கு தீர்வு பெற்றுத்த...
ஈ.பி.டிபி. கூறிவந்ததையே ஜெனீவாவிலும் இந்தியா வலியுறுத்தியது - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்க...
வவுனியா கருப்பனிச்சம் குளம் பகுதி மக்களின் அடிப்படை தேவைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய...