ஈ.பி.டிபி. கூறிவந்ததையே ஜெனீவாவிலும் இந்தியா வலியுறுத்தியது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Thursday, March 21st, 2019

இந்த நாட்டின் அரசியல் தீர்வு தொடர்பிலான பிரச்சினைக்கு நடைமுறைச் சாத்தியமான தீர்வாக 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவதிலிருந்து அதனை ஆரம்பிக்க வேண்டும் என்ற விடயத்தை நாம் தேசிய அரசியல் நீரோட்டத்திற்கு வந்த காலம் முதல் கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக வலியுறுத்தி வருகின்றோம். இச்செயற்பாடானது ஓர் ஆரம்பமே அன்றி, முடிவல்ல. இதையே இந்தியாவும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது. இம்முறை ஜெனீவா கூட்டத் தொடரிலும் இந்தியா அதனையே வலியுறுத்தியிருக்கின்றது. அந்த வகையில் இந்தியா இந்த விடயத்தில் தனது கடப்பாட்டினை ஒழுங்குற நிறைவேற்றியிருப்பதையிட்டு, எமது மக்கள் சார்பாக இந்திய அரசுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்றையதினம் நடைபெற்ற ஆரம்பக் கைத்தொழில், சமூக வலுவூட்டல் அமைச்சு, பொது வழங்கல் மற்றும் பொருளாதார மறுசீரமைப்பு பற்றிய அமைச்சரவை அந்தஸ்த்தற்ற அமைச்சு, விசேட பிரதேசங்கள் அபிவிருத்தி பற்றிய அமைச்சரவை அந்தஸ்த்தற்ற அமைச்சு ஆகிய அமைச்சுகள் தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

இந்தப் பொறுப்புக் கூறல் என்ற விடயமானது, இந்த அரசை சார்ந்தது என்கின்றபோது, தற்போது இந்த அரசைக் கொண்டு வந்தவர்களான – இந்த அரசைத் முண்டு கொடுத்தும் கொண்டிருக்கும்  கொண்டுள்ளவர்களான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் பொறுப்புமாகும். அவர்கள் பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டிவருகின்றார்கள். வடக்கில் அரசுக்கு கால அவகாசம் கொடுக்கக்கூடாது என்றும், தெற்கில் அரசுக்கும் கால அவகாசம் வழற்கப்பட வேண்டும் என்றும் கூறுகின்றார்கள். இவ்வாறு இரட்டைப் போக்கு அரசியலே இவர்களின் வரலாறாகும்.

அதாவது, ஒரு பக்கத்தில் அரசுடன் இணைந்து இந்தப் பொறுப்புக் கூறல் விடயம் தொடர்பில் ஆலோசனைகளை வழங்கிக் கொண்டும் அதற்கான  ஆவணங்களைத் தயாரித்துக் கொண்டே, மறுபக்கத்தில் அரசுக்கு எதிராகக் கேள்விகளைக் கேட்பதுபோல் கேள்விகளையும் கேட்டு வருகின்றனர். இதை எமது மக்கள் விளங்கிக் கொண்டு வருகின்றாரகள்   

இலங்கையில் நடைபெற்ற கசப்பான அனைத்துச் சம்பவங்களுக்கும் பொறுப்புக்கூறல் என்பது அவசியமாகும். ஐக்கிய இலங்கைக்குள் அனைத்து இன மக்களும் இலங்கையர்கள் என்ற உணர்வோடு சமத்துவமாக வாழ்வதற்கு ஏற்றவகையான அணுகுமுறையே அவசியமாகும்.

அதைவிடுத்து “பழிக்கு பழி” என்றவாறாக விடயங்களை கையாள முற்பட்டால் அது இனங்களுக்கிடையே பகைமையையும், முரண்பாட்டையுமே மேலும் கூர்மைப்படுத்தும் அவ்வாறான கசப்பான சூழலுக்கு இடமளிக்காமல், இனங்களுக்கிடையே ஒற்றுமையும், ஐக்கியமும் ஓங்கி வளரச் செய்யும் வகையில் அவ்விடயங்களைக் கையாளும் பொறிமுறைகளும் அணுகுமுறைகளும் அமைவது மிக மிக அவசியமாகும் என்பதே எமது நிலைப்பாடாகும்.

தமிழ் மக்கள் மத்தியில் அரசுக்கு எச்சரிக்கை விடுப்பதும், சர்வதேச நீதிப் பொறிமுறையும், சர்வதேசத் தலையீடுமே தமிழ் மக்களுக்கு நீதியையும், தீர்வையும் பெற்றுத்தரும் என்று உணர்ச்சிப் பேச்சுப் பேசுவதும், தென் இலங்கையில் அரசுடன் தரகு அரசியல் நடத்துவதும் போலித் தமிழ்த் தேசியம் பேசுவோர் தந்தரிச அரசியல் என நினைக்கலாம். இவ்வாறான இட்டை முகம்கொண்ட அரசியல் செயற்பாடுகளால் தமிழ் மக்களுக்கு எந்த விமோசனமும் கிடைக்கப்போவதில்லை.

உள்நாட்டில் உழாத மாடு, ஜெனிவா போய் உழாது என்று ஏற்கனவே நான் கூறியிருந்தேன். நான் கூறியதே இன்று நடந்துள்ளது. தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளாக ஜெனிவாவுக்குச் சென்று அங்கு சர்வதேசத்தைப் பிடித்து அவர்களைக்கொண்டு அரசின் காதைத் திருகப்போவதாக பெரும் எடுப்பில் போனவர்கள்.

அங்கே ஜெனிவாவில் பிரதான பொதுச் சபையில் கலந்து கொள்ள முடியாமல் ஜெனிவா தேனீர் கடைகளில் சந்திப்புக்களை நடத்தியும், கலந்துரையாடல்களை நடத்தியும் காலத்தை வீணடித்துவிட்டு, தமிழ் மக்களுக்காக எதையோ சாதித்துவிட்டதாக தம்பட்டம் அடித்துவிட்டு நாடு திரும்புகின்றார்கள்.

இவர்களின் இந்தப் பயணங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பயன் ஏதுமில்லை. ஜெனிவா தேனீர் கடைகளில் பேசுகின்ற விடயங்கள் தமிழ் மக்களின் அபிலாஷைகளை ஜெனிவா பொதுச் சபையில் பிரதிபலிக்கச் செய்யாது மாறாக அது ஊடகங்களுக்கும் அவரவரின் கட்சி அரசியலுக்குமே உதவலாம். 

எனவே, பொறுப்புக் கூறல் என்ற விடயத்திற்கு பொறுப்புக் கூற வேண்டியது இந்தத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் பொறுப்பாகும்.

எனவே, காலங் கடந்தாவது இந்த நாடு இவ்விடயம் தொடர்பில் இப்போதாவது அக்கறை கொள்வது நல்லதென்றே குறிப்பிட்டு, இன்றைய விடயத்திற்கு வருகின்றேன்.

Related posts:


இனவாதிகளே  வடக்கு கிழக்கில் பொருத்தமற்ற இடங்களில் போதி தேவனை நடுகை செய்கிறார்கள் - நாடாளுமன்றில் டக்...
பேருந்து நிலைய அசௌகரியங்களுக்கு தீர்வுபெற்றுத் தரவேண்டும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் வவு...
ஜா எல மீன்களுக்கான உற்பத்தி தொழிற்சாலையின் உற்பத்தியை அதிகரிக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை