விடுதலை பெறும் வரையில்  தமிழ் அரசியல் கைதிகள் நீதியாக நடத்தப்பட வேண்டும்  – அமைச்சரிடம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Tuesday, May 9th, 2017

சுகவீனமுற்றுள்ள நிலையில் கொழும்பு, மேகசின் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் தமிழ் அரசியல் கைதிகள் அதிகாரிகளால் துன்புறுத்தல்களுக்கு உட்பட்டும், போதிய கவனிப்புகள் இன்றியும் பாரிய பாதிப்புகளுக்கு உள்ளாகி வருவதாகத் தெரிய வரும் நிலையில் இது தொடர்பில் போதிய அவதானங்களைச் செலுத்தி, தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை பெறும் வரையில் அவர்கள் நீதியாக நடத்தப்படுவதை உறுதி செய்யுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் இந்து மத விவகாரங்கள் அமைச்சர் டி. எம். சுவாமிநாதன் அவர்களிடம் வலியுறுத்தியுள்ளார்.

இவ்விடயம் குறித்து மேலும் தெரிவித்துள்ள டக்ளஸ் தேவானந்தா அவர்கள், கொழும்பு, மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் நோய்வாய்ப்படுகின்ற நிலையில், அவர்களை தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்வது தவிர்க்கப்பட்டு வருவதாகவும், கொண்டு சென்றாலும் ஓரிரு நாட்களில் நோய் குணமாகுமுன்பே அவர்கள் சிறைச்சாலைக்கு பலவந்தமாகக் கொண்டு செல்லப்படுவதாகவும் தெரிய வருகிறது. அதே நேரம், சிறைச்சாலை மருத்துவமனையில் உரிய நோய்களுக்கு ஓரிரு மாத்திரைகள் மாத்திரம் வழங்கப்பட்டு, அவர்கள் தொடர்ந்து துன்புறுத்தல்களுக்கு ஆளாகி வருவதாகவும் தெரிய வருகிறது.

அத்துடன், சிறைச்சாலை மருத்துவமனைக்கென மருத்துவ நிர்வாக சபை இருக்கும் நிலையில், ஏனைய கைதிகளே இந்த தமிழ் அரசியல் கைதிகளுக்கு மருத்துவர்களாகவும், தாதியர்களாகவும் சேவை செய்கின்ற ஒரு துர்பாக்கிய நிலை காணப்படுவதாகவும் தெரிய வருகின்றது. இவ்வாறான நிலையில், கடுமையான நோய்வாய்ப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள்கூட உரிய பராமரிப்பு இன்றிய நிலையில் சிறைச்சாலையில் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ள அவல நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்து வருகின்றன.

இதே நேரம், மேற்படி தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் எடுத்துச் செல்கின்ற உணவு வகைகள் எதுவும் அக் கைதிகளுக்கு வழங்கப்பட அனுமதி மறுக்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது. இவ்வாறான நிலையில், வசதி படைத்த, அரசியல் செல்வாக்குள்ள பல கைதிகளுக்கு சிறையினுள் பல சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டு வருவதாக நாளாந்தம் ஊடகங்களில் செய்திகள் வருவதை காணக்கூடியதாகவுள்ளது.

‘சிறைக் கைதிகளும் மனிதர்களே’ என சிறைச்சாலைகளின் வெளிச் சுவர்களில் மாத்திரம் எழுதப்படுவதோடு நின்று விடாமல் அதனை சிறை அதிகாரிகளின் மனதிலும் பதிய வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதுடன், தமிழ் அரசியல் கைதிகள் என்பதற்காக, அவர்களை பாரபட்சமாக நடத்தாமல், அவர்களும் இந்நாட்டு மக்களே என்பதை உணர்ந்து செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட வெண்டும்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து நாம் தொடர்ந்தும் பல முயற்சிகளை எடுத்து வருகின்றோம். அந்த வகையில,; அவர்களது விடுதலையை சாத்தியமாக்கிக் கொள்ளும் வரையில் தமிழ் அரசியல் கைதிகள் நீதியாக நடத்தப்பட வேண்டும் என்பதுடன், அவர்களது நோய்களறியப்பட்டு, அவற்றுக்கு உரிய மருத்துவமனைகளில், உரிய சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுவதற்கு துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

பிராந்திய விளையாட்டுக் கழகங்கங்களும் வலுமை மிக்கதாகக் கட்டியெழுப்பப்படவேண்டும் - நாடாளுமன்றில் டக்ள...
ஜனாதிபதியின் யாழ் வருகையின் போது காணி விடுவிப்புக்கள் தொடர்பில் சாதகமான நிலை ஏற்படும் - அமைச்சர் டக்...
பளை கரந்தாய் பகுதி LRC காணிகளில் வசிக்கும் மக்களின் நிலைமைகள் குறித்து அமைச்சர் டக்ளஸ் கரிசனை!

கற்பாறையில் விதைத்துவிட்டு பயனை எதிர்பார்க்க முடியாது – கரைதுறைப்பற்றில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்ட...
கறுப்பு ஜுலையின் காயங்கள் மக்களிடையே இன்னமும் மாறவில்லை - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!
ஜனாதிபதி ரணிலின் வடக்குக்கான வருகை வெற்றியடைந்துள்ளது - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!