வடக்கில் வரட்சி,தெற்கில் வெள்ளம் : நிவாரணங்கள், இழப்பீடுகளின் நிலை என்ன?- நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா கேள்வி!

Tuesday, June 6th, 2017
அரனாயக்க, மீரியபெத்தை, புளத்கொகுபிட்டிய களுபான, கொலன்னாவ, வெல்லம்பிட்டிய, சாலாவ, மீதொட்டமுல்ல போன்ற பகுதிகளில் ஏற்கனவே இயற்கை மற்றும் ஏனைய அனர்த்தங்கள் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான இழப்பீடுகள் முழுமையாக வழங்கப்பட்டுள்ளனவா? இல்லையேல், எப்போது அவை வழங்கப்பட்டு நிறைவு செய்யப்படும்? என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், கடந்த மாத இறுதிப் பகுதியில் எமது நாட்டில் சுமார் 15 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தம் காரணமாக இதுவரையில் சுமார் 203 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், சுமார் 92 பேர் காணாமற்போயுள்ளனர் என்றும் இதன் காரணமாக சுமார் 1,85,805 குடும்பங்களைச் சேர்ந்த 7,4,815 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், 1,540 வீடுகள் முற்றாகவும், 7,814 வீடுகள் பகுதியளவிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. அண்மைக்காலமாக எமது நாடு பல்வேறு இயற்கை அனர்த்தங்களுக்கும், செயற்கைத் தனமாக புகுத்தப்படுகின்ற அனர்த்தங்களுக்கும் முகங்கொடுத்து வருகின்ற நிலை தொடர்கின்றது. குறிப்பாக தென்மேற்கு பருவப் பெயர்ச்சி மழை காலம் வழமையாக ஏற்படுகின்ற மேற்படி காலகட்டத்தில் எமது நாட்டில் பாதிப்புகள் அதிகம் ஏற்படுவதை நாம் அனுபவத்தில் கண்டு வருகின்றோம். கடந்த வருடத்தை எடுத்துக் கொண்டால்கூட மே மாதம் 15ஆம் திகதி முதல் ஏற்பட்ட மழை, வெள்ளம் காரணமாக எமது நாட்டில் 22 மாவட்டங்களில் பாதிப்புகள் ஏற்பட்டு, சுமார் 104 பேர் உயிரிழந்து, 99 பேர் காணாமற் போய், 301,602 பேர் பாதிக்கப்பட்டு, 128,000 வீடுகள் பாதிக்கப்பட்டு, 30,000 வீடுகள் மீள் கட்டுமாணத்திற்கு உட்படுத்தப்பட வேண்டிய நிலைமையும் ஏற்பட்டிருந்தன. அந்த அனுபவம் காரணமாகவேணும், இந்த வருடத்தில் தென் மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை காலத்தினை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தால் உயிர் மற்றும் உடமை சேதங்களை போதுமானளவு தவிர்த்திருக்க முடியும் என்றே பொதுவாகக் கருதப்பட வேண்டியுள்ளது.
இதனிடையே நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள கடும் வரட்சி காரணமாகவும் மக்கள் பாரியளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், வடக்கு மாகாணத்தை எடுத்துக் கொண்டால், வரட்சி காரணமாக 1,4,685 குடும்பங்களைச் சேர்ந்த 410,703 பேர் கடும் பாதிப்புகளுக்கு உட்பட்டுள்ளனர் எனத் தெரிய வருகின்ற நிலையில், குறிப்பாக யாழ். தீவகப் பகுதிகளில் குடி நீரின்மை காரணமாக மக்கள் இடம்பெயருகின்ற நிலை ஏற்பட்டுள்ளது.
அதே நேரம், மட்டக்களப்பு மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் நிலவுகின்ற அதிக காற்று காரணமாக சுமார் 25 ஆயிரம் கடற்றொழிலாளர் குடும்பங்கள் தொழில் ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிய வருகின்றது.
இதே நேரம், அனர்த்தங்கள் ஏற்படுகின்றபோது, நிவாரணம் மற்றும் நட்டஈட்டுத் தொகைகள் அறிவிக்கப்படுகின்ற போதும், கடந்த காலங்களில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களில் பாதிக்கப்பட்டோருக்குக் கூட இதுவரையில் உரிய இழப்பீடுகள் வழங்கப்படவில்லை என்றும் தெரிய வருகின்றது.
அரனாயக்க, மீரியபெத்தை, புளத்கொகுபிட்டிய களுபான, கொலன்னாவ, வெல்லம்பிட்டிய, சாலாவ, மீதொட்டமுல்ல போன்ற பகுதிகளில் ஏற்கனவே இயற்கை மற்றும் ஏனைய அனர்த்தங்கள் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான இழப்பீடுகள் முழுமையாக வழங்கப்பட்டுள்ளனவா? இல்லையேல், எப்போது அவை வழங்கப்பட்டு நிறைவு செய்யப்படும்?
கடந்த வருடம் மே மாதம் 14ஆம் திகதி ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தின்போது, ‘அனர்த்த நிலைமைகளின்போது இழப்பு மதிப்பீடு செய்யப்பட்டு, பாதிக்கப்பட்ட ஒரு வீட்டுக்கென 25 இலட்சம் ரூபா வரையில் வழங்கக்கூடிய வகையில் காப்புறுதி மூலமான நிதியைப் பெற்றுக் கொள்வதற்கு இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் மூலமாக வழிவகைகள் செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் நிதி அமைச்சர் அறிவித்திருந்தார். எனினும், பாதிப்புக்குள்ளான வீடொன்றுக்கு 25 ஆயிரம் ரூபா வீதமாக வழங்குவதற்கே தீர்மானிக்கப்பட்டு, அதில் 10 ஆயிரம் ரூபா ஏற்கனவே வழங்கப்பட்டதாகவும், எஞ்சிய 15 ஆயிரம் ரூபாவே வழங்கப்படவுள்ளதாகவும் அரச அதிகாரிகள் மட்டத்திலிருந்து தெரிய வருகிறது என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன் உண்மை நிலை என்ன?
கடும் வரட்சி மற்றும் கடும் காற்று காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு, கிழக்கு மற்றும் ஏனைய மாகாண மக்கள் தொடர்பில் முன்னெடுக்கப்படவுள்ள நிவாரண மற்றும் இழப்பீட்டு செயற்பாடுகள் என்ன?
அண்மையில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தம் காரணமாகப் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கியுள்ள மக்கள் தவிர்ந்த, தங்களது இருப்பிடங்களை சுத்தஞ் செய்து வரும் மக்களுக்கும், தூர கஷ;டப் பகுதிகளிலுள்ள மக்களுக்கும் நிவாரணங்கள் உரிய முறையில் கிடைப்பதில்லை எனக் கூறப்படுகின்றது.
இவ்விடயம் தொடர்பில் அவதானங்கள் செலுத்தப்படுகின்றனவா? மேற்படி இயற்கை அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான இழப்பீடுகள் எப்போது வழங்கப்பட்டு, நிறைவு செய்யப்படும்? என டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கேள்விகளை எழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Untitled-1 copy

Related posts: