வடக்கில் பாலுற்பத்தியை மேம்படுத்த முறையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Friday, December 9th, 2016

எமது நாட்டைப் பொறுத்த வரையில் கால்நடைகள் அதிகமாகக் காணப்படுகின்ற மாகாணமாக வடக்கு மாகாணம் காணப்படுகின்ற போதிலும், அங்குள்ள கால்நடைகளில் பல பாலுற்பத்திக்கு ஏதுவானவையாக இல்லாத நிலையில், அவற்றை இனங்கண்டு, பாலுற்பத்திக்கு ஏற்றவாறு அவற்றின் திறன்களை மேம்படுத்துவதற்கும், அப் பகுதிக்குப் பொருத்தமான கால்நடைகளை வரவழைத்துக் கொடுத்து, அத்துறையினை மேலும் வளர்த்தெடுப்பதற்கும் கௌரவ அமைச்சர் ஹரிசன் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.

இன்றையதினம் 2017ம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில்  கிராமியப் பொருளாதார அலுவல்கள் அமைச்சு தொடர்பில் நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கருத்து  தெரிவிக்கையில் –

தற்போது வடக்கில் பாலுற்பத்தித் துறையானது குறிப்பிடத்தக்க உற்பத்தியினை சந்தைப் படுத்துகின்ற நிலையில், அதனை நவீன வசதிகளுடன் கட்டியெழுப்புவதன் ஊடாகவும், அதனை மக்கள் மயப்படுத்தப்பட்ட பண்ணைகளாக உருவாக்குவதன் ஊடாகவும் அத்துறை சார்ந்த மக்கள் மேலும் தங்களது வாழ்வாதாரத்தை வளர்த்துக் கொள்வார்கள் என எதிர்பார்க்கிறேன்.

அந்த வகையில், தற்போது கரவை மாடுகள் பத்து வீதம் ஒரு குடும்பத்திற்கு வழங்கப்படும் திட்டத்தில் வடக்கு மாகாண மக்களையும் உள்வாங்கி அத் துறையை எமது பகுதியிலும் ஊக்குவிப்பதற்கு கௌரவ அமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,

அதே நேரம் எமது பகுதிகளில் போதிய அளவு மேய்ச்சல் தரைகளை உருவாக்க வேண்டியுள்ளது. இதற்கான காணிகளை அப்பகுதியில் இனங்காண முடியும். எனவே, இந்த மேய்ச்சல் தரைகளை உருவாக்கி அவற்றைப் பேணக்கூடிய வழிமுறைகளையும் தங்களது அமைச்சு முன்னெடுக்க வேண்டும் என்றும்,

அத்துடன், வேறு மாவட்டங்களிலிருந்து விலங்கினத் தீவனங்கள் அங்கு கொண்டு வரப்படும் நிலையில், அவற்றின் விலைகள் அதிகரிப்பு மற்றும் நிறை குறைவு போன்ற பிரச்சினைகள் காணப்படுகின்றன. எனவே, யாழ்ப்பாணம் உட்பட வடக்கில் காணப்படுகின்ற வளங்களையும் அடிப்படையாகக் கொண்டு அங்கு விலங்கினத் தீவின உற்பத்திகளை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமாகவுள்ளது. எனவே, இது தொடர்பிலும் கௌரவ அமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன்.

அத்துடன், வடக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் கிளிநொச்சி, வவுனியா, மன்னார் மற்றும் முல்லைதீவு போன்ற மாவட்டங்களில் நெல் களஞ்சிய சாலைகள், நெல் உலர்த் தளங்கள் மற்றும் நெல் ஆலைகளை அமைப்பதன் ஊடாக அம் மக்கள் தங்களுக்குரிய அரிசியை நியாய விலைகளில் பெறுவதை உறுதி செய்ய முடியும்.

எனவே, அவற்றுக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு உதவுமாறும், மேலும், நெல் கொள்வனவின்போது அப்பகுதி மக்களின் அறுவடைகள் தொடர்பிலும் அதிக அவதானம் செலுத்துமாறும் கௌரவ அமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொள்கின்றேன் என தெரிவித்துள்ளார்.

5285

Related posts:


  பலாலி விமான நிலைய விஸ்தரிப்பு தொடர்பிலான உண்மை நிலைப்பாடு என்ன? நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா கோ...
வீட்டுத் திட்டத்தை பூர்’த்தி செய்ய நடவடிக்கை மேற்கொண்டு தாருங்கள் : டக்ளஸ் எம்பியிடம் புன்னாலைக்கட்...
காரைக்கால் திண்ம கழிவு சேகரிக்கும் நிலைய விவகாரம் – ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஆராய்ந்து நியாயமா...