வடக்கில் சட்டவிரோத காடழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்களை சட்டத்தின் முன் நிறுத்த முடியுமா? – ஜனாதிபதி அவர்களிடம் செயலாளர் நாயகம் கேள்வி!

Wednesday, May 23rd, 2018

காடழிப்பு நடவடிக்கைகளை உடன் நிறுத்தி வடக்கு மாகாணத்திலுள்ள வனப் பகுதிகளை பாதுகாப்பதற்கும் சட்டவிரோத காடழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்களை இனங்கண்டு உடன் சட்ட நடவடிக்கை எடுக்க முடியுமா? என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சூழல் அமைச்சர் கௌரவ ஜனாதிபதி அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்றையதினம் நாடாளுமன்றில் நடைபெற்ற கேள்வி நேரத்தின் போதே குறித்த கோரிக்கையை அவர் விடுத்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் –

வடக்கு மாகாணத்தில் தொடர் வரட்சி காரணமாக விவசாயம், நன்னீர் மீன்பிடி, கால் நடை வளர்ப்பு போன்ற எமது மக்களின் முக்கிய வாழ்வாதார துறைகள் தொடர் பாதிப்புகளுக்கு உட்பட்டு வருவதுடன், எமது மக்களும், கால்நடைகளும் குடி நீர் மற்றும் நீர்த் தட்டுப்பாடு காரணமாக பாரிய பாதிப்புகளுக்கு உட்பட்டும் வருகின்றனர்.

இத்தகைய வரட்சி நிலைக்கு மிக முக்கியக் காரணங்களில் ஒன்றாக வடக்கு மாகாணத்தில் இடம்பெற்று வருகின்ற சட்டவிரோத காடழிப்பு நடவடிக்கைகள் இனங்காட்டப்பட்டு வருகின்ற போதிலும், மேற்படி சட்டவிரோத செயற்பாடுகள் இதுவரையில் தடுத்து நிறுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியா பூவரசன்குளம் சந்தியிலிருந்து வெள்ளாங்குளம் சந்தியை இணைக்கின்ற பிரதான வீதியில் அமைந்துள்ள வவுனியா மாவட்டத்திற்கு உட்பட்ட மடுக்குளம், வேலங்குளம், மண்கிண்டி, மன்னார் மாவட்டத்திற்கு உட்பட்ட விளாத்திக்குளம், பரசன்குளம், வலைஞன்கட்டு, இரணை இலுப்பைக்குளம், முல்லைத்தீவு மாவட்டத்திற்கு உட்பட்ட மூன்றுமுறிப்பு, வீரப்பராயர்குளம், பனங்காமம், நட்டாங்கண்டல் போன்ற பகுதிகளில் பல வருடகால பழைமை வாய்ந்துள்ள பெறுமதிமிக்க மரங்கள் அடர்ந்துள்ள வனப் பகுதிகளில் மேற்படி சட்டவிரோத மரங்கள் வெட்டப்படுகின்ற செயற்பாடுகள் நாளாந்தம் இடம்பெற்று வருவதாகவே தெரிய வருகின்றது. இத்தகைய செயற்பாடுகளைத் தடுத்து நிறுத்த வேண்டிய அரச அதிகாரிகள் மேற்படி சட்டவிரோத செயற்பாடுகளுக்கு துணை நிற்பதாகவும் பொது மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

எனவே மேற்படி காடழிப்பு செயற்பாடுகளை உடன் நிறுத்துவதற்கும், வடக்கு மாகாணத்திலுள்ள வனப் பகுதிகளை உரிய முறையில் பாதுகாப்பதற்கும் உடன் நடவடிக்கை எடுக்க முடியுமா?

இதுவரை சட்டவிரோத காடழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்களை இனங்கண்டு, அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்க முடியுமா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Untitled-5 copy

Related posts: