மீள்குடியேற்ற இடங்களிலும் உப தபாலகங்கள் அமைக்கப்பட வேண்டும் – செயலாளர் நாயகம் வலியுறுத்து!

Wednesday, September 5th, 2018

மீள்குடியேற்றப் பகுதிகளில் ஏற்கனவே இருந்த  உப தபாலகங்கள் மீள செயற்படுத்தப்பட வேண்டியத் தேவைகளும் புதிதாக உப தபாலகங்கள் நிறுவப்பட வேண்டியத் தேவைகளும் உள்ளன.

அந்த வகையில் கிளிநொச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் பல்லவராயன்கட்டு மற்றும் முகமாலை உப தபாலகங்கள் இன்னமும் மீள செயற்படுத்தப்படாத நிலைமைகள் காணப்படுகின்றன.

முகமாலை உப தபாலகமானது 2009ஆம் ஆண்டு யுத்த சூழ்நிலை காரணமாக செயற்பாடுகளை இழந்துள்ள நிலையில் இதுவரையில் மீள செயற்படுத்தாத காரணத்தினால் இங்குள்ள மக்கள் யாழ்ப்பாணம் எழுதுமட்டுவாள் நோக்கிச் செல்லக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் யாழ் மாட்டத்திலும் மன்னார் மாட்டத்திலும் ஏற்கனவே செயற்பட்டிருந்த உப தபாலகங்கள் சில இதுவரையில் மீளத் திறக்கப்படாதுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் கிளிநொச்சி மாவட்டத்தில் புதுமுறிப்பு மாயவனூர் செல்வாநகர் பாரதிபுரம் ஜெயபுரம் பள்ளிக்குடா புன்னைநீராவி போன்ற பகுதிகளில் புதிய உப தபாலகங்களை நிறுவ வேண்டியத் தேவை உள்ளது. இத்தகைய தேவைகள் அநேகமாக மீள்குடியேற்ற பகுதிகளுக்கு மிகவும் அத்தியவசியமாகவுள்ளமையை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

அதேபோன்று அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட எல்லைப் பகுதியான பொத்துவில் தாண்டியடி பகுதியில் உப தபாலகத்திற்கென நிர்மாணிக்கப்பட்ட கட்டிடம் தற்போது சுமார் 23 வருடங்கள் கழிந்துள்ள நிலையிலும் இதுவரையில் செயற்படுத்தப்படாமல் இருப்பதாகத் தெரிய வருகின்றது.

இந்த உப தபாலகம் செயற்படாமை காரணமாக இப் பகுதியில் வசிக்கின்ற சுமார் 200க்கும் மேற்பட்ட முதியோர்கள் உள்ளிட்ட ஏனைய மக்கள் அரச உதவித் தொகைகளைப் பெறுவதற்காக சுமார் 20 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள திருக்கோவில், விநாயகபுரம் கோரக்களப்பு உப தபாலகத்திற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.

மேலும் சில உப தபாலகங்கள் தபாலகங்களாக தரம் உயர்த்தப்பட வேண்டியத் தேவையும் இருக்கின்றது. குறிப்பாக யாழ் மாட்டத்தில் தாழையடி கோண்டாவில் மல்லாகம் குருநகர் போன்ற உப தபாலகங்கள் இவற்றுள் குறிப்பிடத்தக்கவையாகும்.

மேலும் மன்னார் மாவட்டத்தில் முருங்கன் தபாலகக் கட்டிடத்தில் பொலிஸார் நிலை கொண்டுள்ளதாகத் தெரிய வருகின்றது. இதனை விடுவித்து தபாலகத்தின் செயற்பாடுகளுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

முல்லைத்தீவு தபாலகமானது மாவட்ட அலுவலகத்திலேயே இன்னமும் செயற்பட்டு வருகின்ற நிலை காணப்படுகின்றது. எனவே முல்லைத்தீவு தபாலகத்திற்கென தனியானதொரு கட்டிடம் அமைக்கப்பட வேண்டியத் தேவையும் இருக்கின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அஞ்சல் அலுவலக கட்டளைச் சட்டத்தின் கீழான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts:


உருத்திராட்ச மாலை அணிந்த பூனைககள் மக்களை தவறாக வழிநடத்த முற்படுகின்றன - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி....
செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் யாழ்.மாவட்ட தலைமை அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல்.
பிரதிநிதிகள் அனைவருக்கும் மக்களது தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய தார்மீகக் கடமை இருக்கின்றது - அமைச்...