முழுமையான அரசியல் பலம் எம்மிடம் இருந்திருந்தால் மக்களின் தலை விதியை குறுகிய காலத்தில் மாற்றி எழுதியிருப்பேன் – வேலணையில் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, February 3rd, 2018

எம்மிடம் முழுமையான அரசியல் பலத்தை தமிழ் மக்கள் வழங்கியிருந்தால் எமது மக்களின் தலை விதியை குறுகிய காலத்தில் மாற்றி எழுதி ஒர் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கிக் காட்டியிருப்பேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு வேலணை பிரதேச கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற பரப்புரை பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்

நாம் தேசிய நீரோட்டத்தில் இணைந்து கொண்டதன் பின்னர் தீவகத்தில் தான் எமது அரசியல் சார்ந்த பணிகளை ஆரம்பித்திருந்தோம். வேலணை உள்ளிட்ட பகுதிகளில் போதுமான வளங்கள் இருந்தும் அவை சரியான வகையில் பயன்படுத்தப்படாத நிலையில் இருந்த தீவகத்தை கடந்த காலங்களில் எமக்கு கிடைக்கப்பெற்ற அரசியல் பலத்தினைக்கொண்டு முடிந்தவரையில் அபிவிருத்தியால் கட்டியெழுப்பியிருந்தோம்.

இந்தநிலையில் தீவகத்தை முழுமையாக சோலைவனமாக்குவதாக இருந்தால் அதற்கு மக்களாகிய உங்களது ஆதரவுப்பலம் எமக்கு தொடர்ந்தும் அவசியமானதாகும்.

90 களில் தீவகம் உள்ளிட்ட யாழ் குடாநாட்டில் நாம் கால்பதிக்காதுவிட்டிருந்தால் எமது மக்களுக்கு வன்னியில் எவ்வாறான பேரவலம் ஏற்பட்டதோ அதுபோலவே இங்கும் நிச்சயம் ஏற்பட்டிருக்கும். ஆனாலும் நாம் இவ்வாறான இடர்பாடுகளையும் நெருக்கடிகளையும் இப்பகுதி மக்கள் சந்திக்காத வகையில் எமது அர்பணிப்புடனான உழைப்பை இங்கு செயற்படுத்திக் காட்டியுள்ளோம்.

எனவே எனது அன்புக்குரியவர்களே! நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை மட்டுமல்லாது மாகாணசபை தேர்தலிலும் நீங்கள் வழங்குகின்ற ஆணையைக்கொண்டு நீங்கள் எதிர்பார்க்கும் மாற்றங்களை நிச்சயம் ஏற்படுத்துவோம்.

எனவேதான் பல்வேறு வாக்குறுதிகளுடனும் நடைமுறைச் சாத்தியமாகாத விடயங்களையும் கூறிக்கொண்டு முகமூடி அணிந்த பலரும் இங்கு வருவார்கள். அவர்களது பசப்பு வார்த்தைகளை நம்பி இனியும் ஏமாந்துவிடக் கூடாது என்பதே எமது கோரிக்கையாகும்.

எனவே வருகின்ற சந்தர்ப்பத்தை எமக்கு ஆதரவாக நீங்கள் வழங்கும் பட்சத்தில் இந்த பகுதியில் கிடைக்கப்பெறும் வளங்களைக் கொண்டு சுயதொழில்களை மேலும் உருவாக்கித்தருவதுடன் மேலும் செய்யப்படவேண்டிய வேலைத்திட்டங்களை தொடர்வதற்கும் மக்களாகிய நீங்கள் எமக்கு முழுமையான ஆதரவுப்பலத்தைத் தருவீர்கள் என நம்பிக்கை கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts: