மத்தியில் கூட்டாட்சி! மாநிலத்தில் சுயாட்சி!! இதில் விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை – நாடளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா குரல்!

Thursday, September 21st, 2017

 

தமிழ் பேசும் மக்களின் அரசியலுரிமைக்காக நாம் தேர்ந்தெடுத்திருக்கும் கொள்கைத்திட்டமானது மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்பதே ஆகும் என்றும் நீண்ட காலமாக நாம் வலியுறுத்தி வரும் இந்த கொள்கையின் அடிப்படியிலேயே எமது மக்களுக்கு அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டுமெனவும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும்  நாடளுமன்ற உறுப்பினரும் அரசியல் யாப்பு நிர்ணய சபையின் வழிநடத்தல் குழு உறுப்பினர்களில் ஒருவருமாகிய டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நாடாளுமன்றத்தில் இன்றும் குரல் எழுப்பியுள்ளார்.

பிரதமர் தலைமையிலான வழி நடத்தல் குழுவினால் வரைபுசெய்யப்பட்ட புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையை இன்று அரசியலமைப்புச் சபையில் பிரதமர் சமர்ப்பித்து உரையாற்றியதைத் தொடர்ந்துகட்சித் தலைவர்கள் உரையாற்றினார்கள். இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குரல் எழுப்பினார்.

மேலும் அவர்  இதுகுறித்து தெரிவிக்கையில் –

தமிழ் பேசும் மக்கள் ஒரு தேசிய இனம். எமது மக்களும் இந்த மண்ணின் பூர்வீக குடிமக்களே. இலங்கையர்கள் என்பதற்காக தமிழர்கள் என்ற அடையாளத்தையோ அல்லது தமிழர்கள் என்பதற்காக இலங்கையர்கள் என்ற அடையாளத்தையோ எமது மக்கள் ஒரு போதும் விட்டுக்கொடுக்க விரும்ப மாட்டார்கள். அவர்கள் இலங்கையர்களாகவும் அதேநேரம் தமிழர்களாகவும் இருக்வே விரும்புகிறார்கள்.

எமது மக்களின் ஆழ்மன உணர்வுகளுக்கு ஆரம்பங்களில் இருந்த தமிழ் அசியல் வாதிகளும் நாட்டை ஆட்சி புரிந்தவர்களும் மதிப்பளிக்க தவறியதால் இலங்கைத்தீவே இரத்தத் தீவாக மாறியது. எமது மக்களின் வரலாறு செந்நீராலும் கண்ணீராலும் எழுதப்பட்டது. இந்நிலையில் இருந்து நாம் மீண்டெழுந்து வந்திருக்கின்றோம். ஆனாலும் அரசியலுரிமையை நாம் இன்னும் பூரணமாக அடைந்துவிடவில்லை.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் இந்நிலையை உணர்ந்தவராக உண்மைத்தன்மையுடன் செயலாற்றி வருகிறார் என்றே நான் நம்புகிறேன்.

நாம் அரசியல் தேசிய நீரோட்டத்தில் இணைந்து கொண்ட நாள் முதல் 13 வது திருத்த சட்டத்தை முழுமையாக அமுல் படுத்துவதற்கூடாக இனங்களுக்கிடையில் ஒரு புரிந்தணர்வை எற்படுத்தவதற்கூடாக கட்டம் கட்டமாக முன்னேறி மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற எமது அரசியல் இலக்கை அடைய வேண்டும் என்பதையே வலியுறுத்தி வந்திருக்கிறோம்.

சமச்சீரற்ற அதிகாரப்பரவலாக்கல் முறையில் தமிழ் பேசும் மக்களுக்கு விசேட அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும். மேற்சபையில் சிறுபான்மை இனங்களுக்கு ஐம்பதிற்கு ஐம்பது வழங்கப்பட வேண்டும் என்றும் இலங்கை அரசு மதச்சார்பற்றதாகவும் பல்லின, பன்மொழி அடையாளத்தை கொண்டதாக இருத்தல் வேண்டும் என்றும் தேர்தல் இட ஓதிக்கீட்டில் பெண்களுக்கு சம அளவு பங்கீடு  உறுதி செய்யப்படவேண்டும் என்பதோடு போலிஸ் மற்றும் முப்படையிலும் இனவிகிதாசாரம் பேணப்படவேண்டும் என்றும் தெரிவித்திருந்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இது போன்ற தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகள் குறித்த விடயங்களை புதிய அரசியல் யாப்பில் இணக்க வேண்டுமென எழுத்து மூலம் தாம் சமர்ப்பித்திருப்பதாகவும் நாடாளுமன்றில் சுட்டிக்காட்டியிருந்தார்.

Related posts:


வடக்கில் மீண்டும் பதற்ற சூழ்நிலை உருவாகக் காரணம் என்ன? - டக்ளஸ் எம்.பி. நாடாளுமன்றில் கேள்வி!
கொரோனாவை எதிர்கொண்டது போல ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச நாடாளுமன்ற தேர்தல் தொடர்பிலும் சரியான முடிவை எடு...
புதிய தொழில் முறைகளை பின்பற்றி அதிக வருமானத்தை ஈட்டுமாறு கடற்றொழிலாளர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் ஆலோசனை...