நாட்டில் என்ன நடக்கின்றது என்பது தொடர்பில் இந்த அரசுக்காவது தெரியுமா? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. கேள்வி!

Wednesday, July 31st, 2019

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு, வெலிசற கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களை அமெரிக்கப் பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் கடந்த 24ஆம் திகதி சந்தித்துள்ளனர் என்ற தகவல் ஒன்று அண்மையில் வெளிவந்திருந்தது.

உண்மையில், இந்த நாட்டில் என்ன நடக்கின்றது? என்பது தொடர்பில் இந்த அரசுக்காவது தெரியுமா? என்று கேள்வி கேட்கின்ற நிலையிலேயே மக்கள் இருந்து வருகின்றார்கள் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர்; நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்றைய தினம் அவசரகாலச் சட்டம் தொடர்பிலான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

இதற்கு முன்னர் அமெரிக்க செனட் சபை உறுப்பினர்கள் யாழ்ப்பாணம் மயிலிட்டி வரையில் போய் ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன. அது தொடர்பில் அரசாங்கத்தில் பொறுப்புக் கூற வேண்டியவர்களிடம் கேட்டபோது, தங்களுக்குத் தெரியாது என அவர்கள் கூறியிருந்தனர்.

இதனிடையே பெயர் தெரியாத விமானங்கள் இலங்கைக்கு வந்துபோவதாகக் கூறப்படுகின்றது. இவை தொடர்பில் யாருக்குத் தெரியும்? எனப் பொதுக் கேள்வி எழப்ப வேண்டிய நிலை இன்று ஏற்பட்டிருக்கின்றது.

இத்தகைய செயற்பாடுகள் தொடர்வதைப் பார்க்கின்றபோது, கடந்த உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னணி தொடர்பிலான சந்தேகங்கள் எழுகின்றன.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் இடம்பெற்று மூன்று மாதங்கள் கடந்துவிட்டன. இந்த மூன்று மாதங்களில் அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் தனது அதிருப்தியை கார்தினல் அவர்கள் அண்மையில் வெளிப்படுத்தி இருந்தார்.

மேற்படி உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னணியில் போதைப் பொருள் வர்த்தகத்திற்குத் தொடர்பு இருக்கலாம் என ஜனாதிபதி அவர்கள்கூட அண்மையில் தெரிவித்திருந்தார்.

இப்போது இத்தகைய அந்நிய தலையீடுகளைப் பார்க்கின்றபோது, வெவ்வேறு வகையிலான சந்தேகங்களையும் அவை கெண்டு தருவதில் ஒன்றும் வியப்பில்லை என்றே தோன்றுகின்றது.

அந்த வகையில், மேற்படி தாக்குதல் தொடர்பிலான விசாரணைகள் உண்மை நிலை சார்ந்து விரைவுபடுத்த வேண்டியதும், மிக அவசியமாகும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றேன்.

அதைவிடுத்து, இதனை ஒரு பொழுது போக்கு அம்சமாக்கி, மக்களுக்கு கிளுகிளுப்பு ஊட்டுவதற்காகப் பயன்படுத்தப்படுவது தவிர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

சுதந்திரத்திற்குப் பின்னரான இந்த நாட்டில் பல்வேறு இன ரீதியிலான, மத ரீதியிலான, அரசியல் ரீதியிலான, உரிமை ரீதியிலான, பயங்கரவாத ரீதியிலான தாக்குதல்கள், மோதல்கள், கலவரங்கள் ஏற்பட்டும், அவை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டும், படிப்பினைகள் பெறப்பட்டும், அவற்றைப் படித்துப் பார்த்து, அவை மீள ஏற்படாத வகையில் தடுப்பதற்கு இயலாத நிலையிலேயே இந்த நாடு திரும்பத் திரும்ப இத்தகைய பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றது.

ஆளுந்தரப்புகள்தான் இப்படி எனில், ஆளுந்தரப்பைக் காப்பாற்றி வருகின்ற பணப் பெட்டி அரசியல் நடத்துகின்ற தமிழ்த் தரப்பு, அரசுக்கு ஒத்து ஊதிக்கொண்டே, எமது மக்களுக்கு சங்கு ஊதிக் கொண்டு இருக்கின்றது.

இன்று எமது மக்களது வாழ்விடங்கள் மற்றும் வாழ்வாதார இடங்கள் என்பன விடுவிக்கப்படாத நிலை தொடர்கின்ற அதேவேளை, தற்போது எமது மக்கள் வாழ்ந்து வருகின்ற, வாழ்வாதாரங்களை ஈட்டி வருகின்ற இடங்களும் மெது மெதுவாக அபகரிக்கப்பட்டு வருகின்றன.

மேலும், வடக்கிலே திட்டமிட்ட குடியேற்றங்கள் பல ஏற்படுத்தப்பட உள்ளதாகவும் சில தகவல்கள் வெளியாகி  வருகின்றன.

ஒரு புறத்தில் இத்தகைய திட்டமிட்ட குடியேற்றங்கள், மறுபுறத்தில் வெளிநாட்டு ஆக்கிரமிப்புகள் என எமது மக்களின் வாழ்க்கையை அடியோடு புதைக்கின்ற செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலை ஏற்பட்டிருக்கின்றது.

Related posts:


வாழும் வரலாறாய் வாழ்ந்து கொண்டிருப்பவர் டக்ளஸ் தேவானந்தா - பருத்தித்துறை கடற்றொழிலாளர் சங்க முன்னாள்...
தையிட்டி இறங்கு துறை பிரதேசத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விஜயம் – கடற்றொழிலாளர் பிரச்சினை தொட...
ஒரு இலட்சம் வேலை வாய்ப்பில் வடக்கு கிழக்கு புறக்கணிக்கப்படாது – அமைச்சர் டக்ளிஸிடம் ஜனாதிபதி கோட்டாப...