பலாலி விமான நிலைய விஸ்தரிப்பு தொடர்பிலான உண்மை நிலைப்பாடு என்ன? நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

Tuesday, November 29th, 2016

பலாலி விமான நிலைய விஸ்தரிப்புத் தொடர்பில் பல்வேறு கருத்துகள் பலரால் முன்வைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, ஏற்கனவே அதியுயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்ட நிலையில் எமது மக்களுக்குச் சொந்தமான குடியிருப்புக் காணிகள், விவசாயக் காணிகள், மீன்பிடித் துறைமுகங்கள் அடங்கலான வளமான கடற்கரைப்பகுதிகள் என்பன  பலாலி விமான நிலையப் பகுதியில் இருக்கின்ற நிலையில், அவை இதுவரையில் எமது மக்களின் பயன்பாட்டுக்குக் கையளிக்கப்படவில்லை.

இந்த நிலையில், பலாலி விமான நிலைய விஸ்தரிப்புப் பணிகளுக்காக அந்தக் காணிகள் சுவீகரிக்கப்படுமென முன்பு ஒரு செய்தி வந்திருந்த நிலையில், தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற அபிவிருத்திக் குழுக் கூட்டமொன்றின்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ மாவை சேனாதிராஜா அவர்கள், பலாலி விமான நிலைய விஸ்தரிப்புக்கு பொது மக்களது காணிகள் சுவீகரிக்கப்பட மாட்டாது என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், பலாலி விமான நிலையம் விஸ்தரிக்கப்படவுள்ளதாகவும், அதற்கென எமது மக்களின் காணிகளில் 600 ஏக்கர் காணி சுவீகரிக்கப்படும் என்றும் கடந்த 19ம் திகதி ஊடகங்களில் செய்திகள் கூறுகின்றன.

எனவே. இதன் உண்மை நிலை என்ன என்று போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் செலவுத் திட்டம் தொடர்பிலான குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு, நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சு தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

0003

Related posts: