பனை நிதியம் வெற்றுத் திட்டம் : நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை – டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Monday, March 11th, 2019

வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்கம் முன்மொழிந்திருக்கும் “பனை நிதியம்” எனும் திட்டத்திற்கு திட்ட தெளிவுபடுத்தலையோ, அதற்கான நிதி ஒதுக்கீட்டையோ செய்யவில்லை. வெறும் வார்த்தைப் பிரயோகமாக மட்டுமே “பனை நிதியம்” என்றவார்த்தை குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் பனை சார் உற்பத்தித் தொழிலை தமது வாழ்வாதாரமாகக் கொண்டுவாழும் மக்களுக்கு எவ்விதமான நன்மைகளும் கிடைக்கப்போவதில்லை என்று செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் நிதி ஒக்கீடு செய்யப்படாமல், புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் நிதி உதவி அளிப்பார்கள் என்ற வார்த்தை ஜாலங்களுடன் “பனை நிதியம்” என்ற திட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைக்கு அமைவாக நிதி அமைச்சர் முன்மொழிந்துள்ளார்.
பனைசார் உற்பத்தித் தொழிலை நம்பி பல ஆயிரம் குடும்பங்கள் வடக்கு, கிழக்கில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்கள், கள்ளு இறக்குதல், பதநீர் தயாரித்தல், பனஞ்சாரயம், கருப்பட்டி தயாரித்தல், பனங்களி, குளிர்பாணம், சொக்லேட், பழகாரங்கள், பனங்கற்கண்டு, போன்ற உணவுப் பொருட்களையும், கட்டிடப் பொருட்களான மரத் தளபாடங்கள், தும்புசார் உற்பத்திப் பொருட்கள், என்று பல்வேறு தொழில்களைச் செய்கின்றார்கள்.
இவற்றை மேலும் நவீன தொழில்நுட்பத்தோடு தயாரிப்பதற்கும், இதை வருமானம் தரும் தொழில்துறையாக பலரும் ஆர்வத்தோடு வேலை செய்யும் தொழிலாகவும் மாற்றுவதற்கும், அவர்களுக்கு போதுமான சந்தை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை அரசு முன்னெடுக்கவேண்டும்.
இந்த நிலையில் பனைசார் தொழிலாளர்களுக்கு புதிய நிதித்திட்டம் என்று ஒன்றை கூறுவதன் ஊடாக எமது மக்களை ஏமாற்றுவதற்கே அரசாங்கமும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் திட்டமிட்டுள்ளார்கள்.
இந்த நிதியத்திற்காக புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் நிதி உதவிகளை செய்ய வேண்டும் என்றால், புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களை புலிகளாகவும், அவர்களை சந்தேகக் கண்கொண்டும் நடத்தும் அரசாங்கம் எவ்வாறு அவர்களிடமிருந்து முதலீட்டை எதிர்பார்க்க முடியும்?
புலம் பெயர்ந்த தமிழ் உறவுகள் வடக்கு கிழக்கில் முதலீடு செய்ய வேண்டுமாக இருந்தால், முதலில் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் எதிர்கொண்டிருக்கும் அரசியல் மற்றும் பொருளாதார பிரச்சனைகளுக்கு அரசாங்கம் நிலையான தீர்வை முதலில் வழங்க வேண்டும். தமிழ் மக்கள் உரிமைகளுடனும், பாதுகாப்புடனும், எதிர்காலம் மீதான நம்பிக்கையுடனும் இலங்கையில் வாழ்கின்ற புறச்சூழல் ஒன்று உருவாக்கப்படுவதன் பின்னணியிலேயே புலம்பெயர்ந்துவாழும் தமிழ் மக்கள் தமது முதலீடுகளை இங்கே செய்வதற்கு முன்வருவார்கள் என்பதை அரசும், அரசுக்கு முண்டு கொடுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தனது செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊடகப் பிரிவு
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி)

Related posts: