நோயாளர் வண்டிச் சேவையானது கிராம மக்களுக்கும் பயனுள்ளதாக செயற்படுவது அவசியம்!

Thursday, June 21st, 2018

இலங்கை மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் சுகாதார, வைத்திய சேவைகள் அத்தியாவசியமானதாகி உள்ளது.  இருபத்திரண்டு (22) மில்லியன் மக்களைக் கொண்ட நமது நாட்டில் 70 சதவீதமான மக்கள் கிராமப் புறத்திலேயே வாழ்கின்றார்கள். அவர்களுடைய சுகாதாரத் தேவைகளை உரிய காலத்திலும், உயரிய தரத்திலும் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பது அரசாங்கத்தின் கடமையாகும் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றில் 1990 சுவசெரிய மன்றத்தினை தாபிப்பதற்கு ஏற்பாடு செய்வதற்கும்; அதனோடு தொடர்புபட்ட அல்லது இடைநேர் விளைவான கருமங்களுக்கு ஏறப்பாடு செய்வதற்குமானதொரு சட்டமூல விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

இலங்கை மக்கள் அவர்களுடைய நாளாந்த வாழ்க்கையில் எதிர்பாராத விதமாக நோய்வாய்ப்படும் போதும் ஆபத்துக்களின்போதும் விபத்துக்களின்போதும் அவர்களுக்கு உடனடியாக முதலுதவிச் சேவையும் வைத்திய வசதியும் அவசரத் தேவையாக இருக்கின்றது. நோயாளர்களுக்கு உடனடி முதலுதவிகளைச் செய்வதற்கும் பாதிக்கப்பட்ட இடத்திலிருந்து மிகத்துரிதமாக அன்மையிலுள்ள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லவும் போதுமான வசதிகளை ஏற்படுத்துவது எமது கடமையாகும்.

அனர்த்தங்கள் அல்லது விபத்துக்கள் நடைபெற்ற இடத்திலிருந்து நோயாளியை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்வதில் சாதாரண போக்குவரத்து ஏற்பாடுகள் காலதாமதமாகவே அமைவதுடன் பல சிரமங்களையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அந்தக் குறைபாட்டை நிவர்த்திக்கும் பொருட்டு பாதிக்கப்பட்ட நோயாளியை உடனடியாக எடுத்துச் செல்வதற்கு துரிதமான போக்குவரத்து ஏற்பாடு ஏற்படுத்தப்படுவது அவசியமாகும்.

எனவே அவசர மருத்துவ உதவி தேவையாக இருப்பவர்களையும் எதிர்பாராத அனர்த்தம் அல்லது விபத்தில் காயப்பட்டவர்களையும் துரித கதியில் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லுவதற்கு நம்பத்தகுந்த நோயாளர் வண்டிச் (அம்புலன்ஸ்) சேவையொன்று அத்தியாவசியமாகும்.

நமது நாட்டில் ஏறத்தாழ 15000 கிராமங்கள் உள்ளன. அப்பிரதேசங்களிலிருந்து நோயாளிகளை சிகிச்சைக்காக அல்லது மேலதிக சிகிச்சைக்காக ஆதார வைத்தியசாலைக்கோ அல்லது மாவட்ட வைத்தியசாலைக்கோ அல்லது போதான வைத்தியசாலைக்கோ கொண்டு செல்லுவதற்கு போதுமான அளவு நோயாளர் வண்டிகள் (அம்புலன்ஸ்) நமது நாட்டில் இல்லை என்பதை நாம் அனைவரும் அறிவோம். இக்குறைபாட்டை நிவர்த்தி செய்வதற்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்து நடவடிக்கை எடுத்திருப்பது காலத்தின் கட்டாயத் தேவையாகும். இந்த முயற்சியை நாம் வரவேற்கின்றோம்.

இந்தியாவில், குறிப்பாக சென்னை மாநகரத்தின் முக்கிய வீதிச் சந்திகளில் அம்புலன்ஸ் வண்டிகள் வைத்தியர், தாதிச் சேவையினர் முதலுதவியாளர்களுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். ஒரு விபத்து ஆபத்து நடந்தவுடன் அதனால் பாதிக்கப்பட்டவர்களை  உடனடியாக இந்த அம்புலன்ஸ் வண்டிகள் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்கின்றன. இதனால் விபத்தில் காயமடைந்தவர் அல்லது தனது உயிருக்காக போராடிக் கொண்டிருப்பவர் உடனடி வைத்திய வசதிகளைப் பெற்று காப்பாற்றப்படுகின்றார்கள்.

இதனை முன்மாதிரியாக கொண்டு கௌரவ பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்க அவர்கள் இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடாத்தி இத்திட்டத்தை நமது நாட்டில் நடைமுறைப்படுத்த எடுத்துள்ள நடவடிக்கை வரவேற்க்கதக்கதாகும்.

இதே போன்று கிராமப்புறங்களில் மகப்பேற்றை எதிர்பார்த்திருக்கும் தாய்மார்கள் தொற்று நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கும் உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படுவதற்கு இந்த துரித நோயாளர் வண்டிச் சேவை உதவும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

அண்மையில் தாமரைக் கோபுரத்தில் மின்னுயர்த்தியில் பொருத்தும்; வேலைகளைச் செய்து கொண்டிருந்த கிளிநொச்சியைச் சேர்ந்த 19 வயது கட்டிட தொழிலாளி தவறிவிழுந்து அகால மரணமடைந்தார்.

இவரின் சடலத்தை கிளிநொச்சியில் உள்ள அவரது வீட்டிலுள்ள பெற்றோரிடம் கையளிப்பதற்த அரச சார்பற்ற நிறுவனமொன்றிலிருந்து பெறப்பட்ட பிரேத காவு வண்டி ஒன்று ஏற்பாடு செய்யப்படுவதாக அந்த குடும்பத்திற்கு கூறப்பட்டபோதும் பின்னர் கொழும்பிலிருந்து கிளிநொச்சிக்கு மரணித்தவரின் சடலத்தைக் கொண்டு செல்வதற்காக ரூபா 30000ம் வாகனச் செலவாக கோரப்பட்டதாக இறந்தவரின் குடும்பத்தினர் தெரிவித்திருக்கின்றனர். வறுமையில் வாழும் அந்தக் குடும்பத்தினரை அவ்வாறு ஏமாற்றியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபையின் உறுப்பினர் ஒருவர் என்று பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

கௌரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களால் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் இந்த துரித நோயாளர் வண்டிச் சேவையானது நகர்ப்புறங்களில் முடங்கிவிடாமல் கிராமப் புறத்தில் வாழும் மக்களுக்கு உதவக்கூடியவாறு செயற்படுத்தப்பட வேண்டும். நகர் புறத்தில் வாழும் மக்கள் கணிசமானவர்கள் வாகன வசதிகளோடு வாழ்வதால் அவர்கள் ஏதோ ஒரு வாகன ஏற்பாட்டுடன் வைத்தியசாலைக்கு வந்து சேர்ந்துவிடக் கூடும். ஆனால் கிராமங்களில் வாழும் மக்கள் இவ்வாறான சேவைகளை எவ்வாறு பெற்றுக்கொள்வது என்பது தெரியாமலும் இவ்விதமான சேவைகளை எவ்வாறு ஒழுங்குபடுத்தப்படுகின்றது என்பது புரியாமலும் பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுத்து வாழ்கின்றனர்.

Untitled-5 copy

Related posts:


மக்கள் அரசியல் பலத்தை எமக்கு வழங்கியிருந்தால் அவர்கள் எதிர்நோக்கிவரும் கணிசமான பிரச்சினைகளுக்கு தீர...
வடக்கிற்கு பனங்காய் தெற்கிற்கு தேங்காய் - கூட்டமைப்பு வீழ்த்திய இரண்டு காய்கள் – நாடாளுமன்றில் டக்ள...
கலாநிதி சர்வேஸ்வரன், பேராசிரியை நஜீமா அடங்கிய புதிய அரசியலமைப்பிற்கான நிபுணர் குழு நியமனம்!