நிலையான ஆட்சிக்கு வாய்ப்பில்லையேல் நாடாளுமன்றத்தை கலைத்துவிடுங்கள் – சபையில் டக்ளஸ் எம்.பி. கோரிக்கை !

Friday, June 7th, 2019

நாட்டில் அரசியல் ஸ்திரமற்ற நிலைமை மேலெழுந்திருப்பதானது எதிர்மறையான தாக்கத்தைக் கொண்டிருக்குமென்று உலக வங்கி எச்சரித்துள்ளதாக அறிய முடிகின்றது. அதேநேரம், அண்மையில் இடம்பெற்ற பாதுகாப்புடன் தொடர்புடைய சம்பவங்கள் முதலீட்டாளர்களின் உணர்வுகளில், அபிப்பிராயங்களில் தாக்கத்தினை ஏற்படுத்தும் எனவும் உலக வங்கி மேலும் தெரிவித்துள்ளது.

இந்த நாட்டில் அரசியல் ஸ்திரமற்ற நிலைமை என்பது கடந்த சில காலங்களாகவே தோன்றிவந்துள்ள போதிலும், அது தற்போது உச்ச நிலையினை அடைந்திருக்கின்றது என்றே கூற வேண்டியுள்ளது.

இந்த நாட்டிலே ஜனாதிபதி ஒருவர் இருக்கின்றார். நாடாளுமன்றம் ஒன்று இருக்கின்றது.  225 உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். அவர்களில் சபாநாயகராக ஒருவர் இருக்கின்றார். பிரதமராக ஒருவர் இருக்கின்றார். எதிர்க்கட்சித் தலைவராக ஒருவர் இருக்கின்றார். ஆனால், இந்த நாட்டில் அரசாங்கம் என ஒன்று இருக்கின்றதா? என்றே மக்கள் கேட்கிறார்கள் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பிலான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை தொடர்பிலான விவாதத்தில் கலந்துகொண்டு  உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

எனவே, ஒரு ஸ்திரமான ஆட்சியை அமைக்க வேண்டியது முதலில் மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கிய தேவையாக இருக்கின்றது. அது தனிக் கட்சி ஆட்சியாக, கூட்டுக் கட்சிகளின் ஆட்சியாக, ஓர் இடைக்கால ஆட்சியாக எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், அடுத்த பொதுத் தேர்தல் வரையிலும் நீடித்து, நிலைக்கக்கூடிய பலமிக்கதொரு ஆட்சியாக இருக்க வேண்டும். அதற்கு வாய்ப்பு இல்லையேல், நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டு, உடனடியாக பொதுத் தேர்தலுக்குச் செல்ல வேண்டும்.

மக்கள் அளித்த ஆணை இன்னும் இருக்கின்றது. அது முடியும்வரை நாங்கள் தொங்கிக் கொண்டிருப்போம் என்றெல்லாம் கதைகூறிக் கொண்டு இருக்க முடியாது.

மக்கள் இத்தகைய வலுவற்றதும், ஊழல், மோசடிகள் நிறைந்ததும், மக்களைப் பாதுகாப்பதற்கு இயலாததும், மக்கள்மீதே நாளாந்தம் அதிக சுமைகளைத் திணிப்பதும், மக்களது அன்றாட, அடிப்படை என எப்பிரச்சினைகளையும் தீர்க்காததுமான ஆட்சிக்கென மக்கள் ஒருபோதும் ஆணை கொடுக்கவில்லை என்பதை மனதில் இருத்திக் கொள்ள வேண்டும்.

அரசியலில் நிச்சயமற்ற நிலை. அரசாங்கத்தில் நிச்சயமற்ற நிலை. மக்கள் வாழ்க்கiயில் நிச்சயமற்ற நிலை எனத் தொடர்வதைப் பார்த்தால், நீங்கள் அரசியல் செய்து முடிக்கும்போது, இந்த நாட்டு மக்கள் கூண்டோடு அழிந்து முடிந்துவிடுவார்கள் என்றே தோன்றுகின்றது.

Related posts:

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு கிளிநொச்சி நகரில் மகத்தான வரவேற்பு : ஆசிவேண்டி பிள்ளையார் கோவி...
ஜி. ஜி. பொன்னம்பலத்தின் ஆங்கில மோகமே தனிச் சிங்களச் சட்டம் உருவாகக் காரணமானது – நாடாளுமன்றில் டக்ளஸ்...
தமிழ் மக்களின் நலன்களை முன்னிறுத்தி புலம்பெயர்தேச முதலீட்டாளர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளேன் – ஊட...