தமிழ் மக்களின் உரிமைப்போராட்ட வரலாற்றின் உயிர்த்துடிப்புள்ள பாத்திரமாக திகழ்ந்தவர் மங்கையற்கரசி அம்மையார் – டக்ளஸ் தேவானந்தா

Thursday, March 10th, 2016

தமிழர் உரிமைப் போராட்ட வரலாற்றில் ஒர் உயிர்த்துடிப்பு பெண்மணியாக திகழ்ந்தவர்  மங்கையற்கரசி அம்மையார்  என மங்கையற்கரசி அம்மையாரின்  மறைவு குறித்து ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் ….

mankai akka2

எமது உரிமைப்போராட்ட வரலாற்றில்

உயிர்த்துடிப்புள்ள ஓர் பெண்மணியின் இழப்பு!…

மங்கை அக்கா என்று தமிழ் பேசும் மக்களின்
ஆழ்மன உணர்வுகள் அடிக்கடி உச்சரித்த மகத்தான
அந்த பெண்மணியின் இழப்பு செய்தி
எமக்கு ஆறாத துயரத்ததை தந்திருக்கிறது.

 

தமிழ் பேசும் மக்களின் உரிமை போராட்ட வரலாறு
அகிம்சையில் தொடங்கியே ஆயுத வழிமுறைக்கு மாறியது.

 

அகிம்சை போராட்ட வரலாற்றை அன்று
வழி நடத்திய தந்தை செல்வாவோடு இணைந்தும்,
தந்தை செல்வா அவர்களின் இழப்பின் பின்னர்
அகிம்சை போராட்டத்தை தன் தோள் மீது சுமந்தும்
தலைமையேற்று வழி நடத்தி வந்தவர்
அண்ணன் அமிர்தலிங்கம் அவர்கள்.

 

வீட்டுக்குள் அடைபட்டிருந்த பெண்களுக்கு
விடுதலையின் வீர உணர்ச்சியை ஊட்டிய
மகாகவி பாரதியின் கனவுகளை மெய்ப்பித்து
தன் கணவர் அமரர் அண்ணன் அமிரின் கைப்பிடித்து
வேலி எல்லை தாண்டி வீதிக்கு வந்து
உரிமைக்காக உரத்து குரல் கொடுத்தவர் மங்கை அக்கா!

 

தமிழ் பேசும் மக்களின் விடுதலை கனவுகளை
நெஞ்சில் கரு வளர்த்து நான் எழுச்சியுற்று வந்த
என் இளவயது நாட்களில் மங்கை அக்காவின்
மேடை பேச்சுக்களை நான் அடிக்கடி கேட்டிருக்கிறேன்.
அண்ணர் அமிர் அவர்களுக்கு பக்க துணையாக
அவர் நிமிர்ந்து நின்ற அகிம்சை போராட்ட களங்களில்
அவரது முகத்தை நான் அடிக்கடி கண்டிருக்கிறேன்.

 

அவர்கள் அகிம்சை வழி, நாம் ஆயுத வழி என்றும்
அரசியல் சித்தாந்த வழிமுறையில்
அன்று நாம் முரண்பட்டு நின்ற போதும்,
விரிக்கும் சிறகுகள் இரண்டாக இருப்பினும்
பறக்கும் திசை ஒன்றாகவே இருக்கட்டும் என்று
மங்கை அக்காவின் உணர்வுகளையும் நான்
தீர்க்க தரிசனமாக அன்றே ஏற்றுக்கொண்டவன்.

 

ஈழ மக்கள் ஐனநாயக கட்சியை நாம் உருவாக்கி
பலத்த ஐனநாயக மறுப்புகளை நாம் எதிர்கொண்ட போது
அண்ணர் அமிர் அவர்களோடு இணைந்து
எமக்கு தார்மீக ஆதரவு பலம் தந்தவர் மங்கை அக்கா.

 

அரசியல் ஐனநாயக பன்மைத்துவ நோக்கில்
எமக்காகவும் வாதாடி அவர் குரல் கொடுத்த
அந்த நன்றியை நாம் எப்படி மறப்பது?..
ஈழத்தமிழர்களின் உரிமை கேட்டு தமிழகமெங்கும்
நடந்த உண்ணாவிரதப்போராட்டங்களில்
அண்ணர் அமிர், மங்கை அக்கா அவர்களோடு
நாமும் இணைந்து எமது குரல்களை எழுப்பிய
உணர்வெழுச்சிகள் இன்னமும் மறக்க முடியாதைவை.

 

அண்ணர் அமிர் அவர்கள் கொன்றொழிக்கப்பட்ட பின்னர்
எமது தேசத்தில் இருந்து பிடுங்கியெறியப்பட்டவர்களில்
ஒருவராக மங்கை அக்கா புலம் பெயர் தேசமென்றில்
வாழ்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டாலும்,..
தான் நேசித்த தன் அடிவேர்களின் தாயக மண்ணை
அவர் ஒரு போதும் மறந்திருந்ததில்லை.

 

தமிழ் பேசும் மக்களின் அரசியலுரிமை குறித்து
தொடர்ந்தும் அவர் காட்டி வந்த உணர்வுகள்
எமது தேசத்தில் என்றும் அழியாத பதிவுகள்.

 

மங்கை அக்காவிற்கு எமது இறுதி மரியாதை!
இந்த இழப்பின் துயரத்தில் ஆழ்ந்திருக்கும்
அவரது குடும்பத்தவர்கள், உறவினர்கள், மற்றும்
அவரை நேசித்தவர்கள் அனைவருக்கும்
ஆறுதல் கூறுகின்றோம்.

 

டக்ளஸ் தேவானந்தா

செயலாளர் நாயகம்

ஈழ மக்கள் ஐனநாயக கட்சி (ஈ.பி.டி.பி)

mankai akka

Related posts:


“சுரக்ச” காப்புறுதிக்கு காப்புறுதி இல்லை – ஊழலே மிஞ்சி இருக்கின்றது - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. ச...
அபிவிருத்தியை இலக்காக கொண்ட வேலைத் திட்டங்களின் போது அடையாளப்படுத்தப்பட்ட விவகாரங்களுக்கு அமைச்சர் ட...
அமைச்சர் டக்ளஸ் அதிரடி நடவடிக்கை - பூநகரி ஜெயபுரம் மக்களின் நீண்டகால பிரச்சினைகளுக்கு கிடைக்கப்பெற்ற...