நந்திக் கடல் புனரமைப்பு செய்யப்படவேண்டும் – புதிய பாதீட்டு உரையில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Saturday, November 19th, 2016

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியால் வடக்கு – கிழக்கு மாகாணங்களின் கரையோரப் பகுதிகளை அபிவிருத்தி செய்யும் திட்டமொன்று ஏற்கனவே கொண்டு வரப்பட்டு, கிழக்கு மாகாணத்தில் அத் திட்டம் பூர்த்தி செய்யப்பட்டது. வடக்கில் அது ஆரம்பிக்கப்படவில்லை. வடக்கைப் பொறுத்த வரையில் முல்லைதீவு மணலாறு தொடக்கம் மன்னார் முசலி வரையிலான கடலோர கிராமங்கள் இத் திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்படுவதற்காக இனங்காணப்பட்டிருந்தன. அந்த வகையில் தற்போது இங்கு கூறப்படுகின்ற திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.

நேற்றையதினம் நாடாளுமன்றில் புதிய ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட விவாதத்தின்போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

புதிய வரவுசெலவு திட்டத்தில் யாழ்ப்பாணம் உட்பட 10 கரையோர மாவட்டங்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதற்காக 1200 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அதே நேரம் கடற்றொழில் அபிவிருத்தி தொடர்பிலும் பல திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

வடக்கில் தற்போதுள்ள சூழ்நிலையில் கடற்றொழிலாளர்கள் பல்வேறு பாதிப்புகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். இந்திய மீனவர்களின் எல்லை தாண்டியதும் தடை செய்யப்பட்ட உபகரணங்களைக் கொண்டதுமான தொழில் முயற்சிகள் இன்னும் தொடருகின்றன.

அதே வேளை, பிற மாவட்ட கடற்றொழிலாளர்களது ஊடுருவல்களும் வடக்கு மாகாண கடற்தொழிலாளர்களின் வாழ்வாரத்தினை பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கி வருகிறது. வடக்கின் கடல் வளங்கள் தொடர்ந்தும் அழிக்கப்பட்டும் வருகின்றன. இந்நிலைகளை மாற்ற அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இன்று எமது நாட்டில் மிகவும் வறுமையான மாவட்டமாகக் முல்லைதீவு மாவட்டமே காணப்படுகின்றது. அங்கு  நந்தி கடலை புனரமைப்பு செய்து உரிய உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொண்டால் சுமார் 5000 வரையிலான கடற்றொழிலாளர்கள் பயனடைவார்கள். இத்திட்டம்  குறித்து நான் பலமுறை வலியுறுத்தியுள்ளேன்.  எனவே இவற்றை அவதானத்தில் எடுத்து இத்திட்டத்தை செயற்படுத்த அரசு விரைந்து முன்வர வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

06

Related posts:


மண் அகழப்படுவதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்குமாயின் நியாயமான தீர்வு பெற்றுத் தரப்படும் - அங்குலான...
நகரமயமாகும் பூநகரி - நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் விசேட...
மற்றுமோர் உலக சாதனை படைத்த திருச்செல்வம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் சான்றிதழ் வழங்கப்பட்டு கௌ...