நிலையற்ற அரசியல் கொள்கையே நிடிக்கிறது – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Thursday, July 5th, 2018

அடிக்கடி வன்முறைத் தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்ற பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருக்கின்ற மகிழ்ச்சியினைக்கூட இலங்கை மக்கள் கொண்டிருக்கவில்லை. எமது நாட்டின் நிலையற்ற பொருளாதார மற்றும் அரசியல் கொள்கைகள் காரணமாகவே எமது மக்கள் மகிழ்ச்சியற்ற சமுதாயமாக மாறி வருகின்றனர் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற விசேட வியாபாரப் பண்டங்கள் அறவீட்டுச் சட்டத்தின் கீழான கட்டளைகள், சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழான  பிரேரணைகள், துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழான கட்டளைகள், உற்பத்தி வரி விசேட ஏற்பாடுகள் சட்டத்தின் கீழான கட்டளைகள் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

உலக சனத் தொகையில் 99.7 சத வீதத்தினை உள்ளடக்கிய வகையில் 163 நாடுகளைக் கொண்டு உலக பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நிறுவனம் வருடந்தோறும் ஒரு பட்டியலை வெளியிடுகின்றது. அதில் உலகில் அமைதியான நாடுகள் மற்றும் மகிழ்ச்சியான நாடுகள் தர வரிசைப் படுத்தப்பட்டிருக்கும்.

இதன்படி, இலங்கையானது அமைதியான நாடு என்ற வகையில் உலகளாவிய ரீதியில் 67வது இடத்தில் இருப்பதுடன், பாகிஸ்தான் 151வது இடத்தில் இருக்கின்றது.

அதே நேரம், உலகளாவிய ரீதியில் மகிழ்ச்சியான நாடுகள் தர வரிசையில் இலங்கையானது 116வது இடத்திலும், பாகிஸ்தான் 75வது இடத்திலும் இருக்கின்றது.

அடிக்கடி வன்முறைத் தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்ற பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருக்கின்ற மகிழ்ச்சியினைக்கூட, அமைதி நிலை கொண்டுள்ள இலங்கை மக்கள் கொண்டிருக்கவில்லை என்பதையே இது எடுத்துக் காட்டுவதாக அமைகின்றது என்றே கருத வேண்டியுள்ளது.

எமது நாட்டின் நிலையற்ற பொருளாதார மற்றும் அரசியல் கொள்கைகள் காரணமாகவே இன்று எமது மக்கள் மகிழ்ச்சியற்ற சமுதாயமாக மாறி வருகின்றனர். நாட்டின் கடன் சுமையும், உற்பத்தியை மீறிய இறக்குமதிகளும் என நாட்டின் பொருளாதாரம் நாளுக்கு நாள் வீழ்ச்சி நிலையினைக் கண்டு வருகின்றது.

ஆட்சி மாற்றங்கள் ஏற்படும் போதெல்லாம் பொருளாதார கொள்கைகளையும் மாற்றிக் கொண்டிருக்கும் நிலைமை மாற்றப்பட்டு, நாட்டுக்குப் பொருத்தமான நிலையான பொருளாதாரக் கொள்கைகள் வகுக்கப்பட்டு, அதனையே நிலையானதாக முன்னெடுத்துச் செல்கின்ற நிலை இந்த நாட்டில் ஏற்படும் வரையில், இந்த நாட்டினால் முன்னேற்றம் காண முடியாது என்றே கூற வேண்டும்.

உற்பத்தித் திறன் வீழ்ச்சி நிலை கண்டுள்ள இந்த நாட்டுக்கு பொருத்தமான சந்தைவாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும். ஆனால், இவை எதையும் செய்யாமல், எமது நாடு முன்னேறிவிடும் என ஆரூடம் கூறிக் கொண்டு அரசியல் நடத்துவதால் எவ்விதமான பயன்களும் இந்த நாட்டுக்கோ, நாட்டு மக்களுக்கோ கிட்டப் போவதில்லை என்பதுடன், இந்த நாடு மிக விரைவில் மீள முடியாத வகையில் படு பாதாளத்திற்குள் தள்ளப்படும் என்ற விடயத்தை முன்கூட்டியே இங்கு பதிவு செய்து வைக்க எண்ணுகின்றேன்.

Related posts:

மகளிர் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் தீர்வுகளைக் காணமுடியாத நிலை காணப்படுவதேன்?...
இனசமூகங்களிடையேயான நம்பிக்கை சிதைக்கப்படுகின்றன - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!
எக்ஸ் பிறஸ் பேர்ள் கப்பல் விபத்தினால் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவி...

முற்கூட்டிய திட்டமிடல்கள் இருந்திருந்தால் அழிவுகளிலிருந்து மக்களை ஓரளவேனும் பாதுகாத்திருக்க முடியும்...
தாயக தேசத்தின் விடிவொன்றே தமிழ் மக்களின் புத்தாண்டு நிமிர்வாகும் - புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் ...
இழுவை வலை தொழிலை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க முடியாது. - அமைச்சர் டக்ளஸ் உறுதிபடத் தெரிவிப்பு!