மகளிர் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் தீர்வுகளைக் காணமுடியாத நிலை காணப்படுவதேன்? – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா கேள்வி !

Tuesday, November 29th, 2016

கடந்த 2015ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்கள் வரையில் இந்த நாட்டில் மகளிர் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான 13,661 குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 6, 670 குற்றங்களுக்கு மாத்திரமே தீர்வு காணப்பட்டுள்ளதாகவும், இந்த நிலையில், 6,991 குற்றங்கள் தொடர்பில் இன்னும் தீர்வு காணப்படாதுள்ளதாகவும் சட்டம் மற்றும் ஒழுங்கு விவகார அமைச்சர் அண்மையில் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

இதன் அடிப்படையில் பார்க்கின்றபோது, சரி பாதிக்கும் மேலான குற்றங்கள் தொடர்பில் தீர்வுகளைக் காண இயலாத நிலையே இந்த நாட்டில் நிலவுகின்றது என்பது புலனாகின்றது.

அந்த வகையில், இவ்வாறான குற்றச்சாட்டுகள் தீர்க்கப்படாமல், அவை இழுத்தடிப்பு நிலைகளுக்கு உட்படுகின்றபோது, இக்குற்றங்களை இழைப்போருக்கு, மேலும், மேலும் அக் குற்றங்களின்பால் செல்லக்கூடிய வாய்ப்புகளே ஏற்படுத்தப்படுகின்றன என்பதை நாம் அவதானத்தில் கொள்ள வேண்டும் என்பதை இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன் – என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் செலவுத் திட்டம் தொடர்பிலான குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு, நாடாளுமன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் –

இந்த நாட்டில் குறிப்பாக மகளிர் மற்றும் சிறுவர்களுக்கு எதிராகக் குற்றங்கள் வர, வர அதிகரித்து வருவதையே அன்றாடம் ஊடகங்களில் காணக்கூடியதாகவுள்ளது.

இவ்வாறான குற்றங்களால், எமது சமூகம் மிகுந்த பாதிப்புகளுக்கு உட்பட்டு வருவதையும் அவதானத்தில் கொள்ள வேண்டியுள்ளது.அதே நேரம், கடந்தகால யுத்தம் காரணமாகப் பாதிக்கப்பட்டு, நிர்க்கதியான நிலையில், தங்களது வாழ்வாதாரங்களுக்கே அன்றாடம் போராடிக் கொண்டிருக்கின்ற எமது பெண்களுக்கு, அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் மூலமான உதவித் திட்டங்களைப் பெற்றுக் கொடுப்பதில்கூட பாலியல் ரீதியிலான இலஞ்சம் கோருகின்ற பல அதிகாரிகளின் செயற்பாடுகள் தொடர்பில் அண்மித்த காலங்களில் அறியக்கூடியதாக இருந்தது.

எனவே, இவ்வாறான வன்முறைகள் தொடர்பான குற்றச்சாட்டுகளை உடனடியாக விசாரித்து, குற்றவாளிகளை இனங்காண்பதற்கும், அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் ஒரு தனிப்பட்ட பொறிமுறை அவசியமாகிறது என்ற விடயத்தை இங்கே முன்வைப்பதுடன்,

அதற்கு ஏதுவாகத் தனியான நீதிமன்றக் கட்டமைப்புகள் உருவாக்கப்பட வேண்டியது அவசியமாகும். அந்த வகையில் கௌரவ அமைச்சர் சந்திராணி பண்டார அவர்களால் முன்வைக்கப்பட்டிருந்த கோரிக்கைக்கு இணங்க, சட்டமா அதிபர் திணைக்களம், சிறுவர்கள் தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்குத் தனியான நீதிமன்றமொன்றை அமைப்பதற்கான யோசனையை பிரதம நீதியரசருக்குக் கையளித்ததாகவும் அறிய முடிந்தது.

அந்த வகையில், இந்த சிறுவர் நீதிமன்றம் தொடர்பான தற்போதைய நிலை என்ன என்பதை அறிய விரும்புகின்றேன்.

Untitled-1 copy

Related posts:


போதையற்ற தேசத்தை உருவாக்குவது எந்த வகையில் சாத்தியமாகும்? - சபையில் டக்ளஸ் தேவானந்தா கேள்வி
தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கு முன்னரே இந்த நாடு பொருளாதாரத்தில் பாரிய வீழ்ச்சி கண்டிருந்தது – நாட...
பூநகரி பிரதேச கடல்பாசி வளர்ப்பை ஊக்குவிப்பதற்கான இரண்டாம் கட்ட கொடுப்பனவு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா...