தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் காணிகள் விடுவிப்பு – ஜனாதிபதிக்கு டக்ளஸ் தேவானந்தா அவசர கடிதம்!

IMG_0597 Wednesday, April 19th, 2017

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் படையினர் மற்றும் பொலிஸார் வசமுள்ள எமது மக்களின் காணி, நிலங்கள், கட்டிடங்கள் என்பவற்றை விடுவித்தல் தொடர்பில் ஜனாதிபதி அவர்கள் தலையிட்டு விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ள அவர், தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதங்களை மேற்கொள்கின்ற நிலையில்தான் அவர்களது விடுதலையைப் பற்றி பேசப்படுகின்ற ஒரு சூழ்நிலையே தொடர்ந்து காணப்படுகின்றது. எனினும், எம்மால் அவ்வாறு பார்க்க முடியாது. தமிழ் கைதிகளின் விடுதலை குறித்து தொடர்ந்தும் நான் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து வருவதுடன், தங்களை நேரில் சந்திக்கும்போதும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளேன். எனவே, இது தொடர்பில் மனிதாபிமான அடிப்படையில் உரிய நடவடிக்கையை தாங்கள் எடுக்க வேண்டும்.

அத்துடன், படையினர் வசமுள்ள காணிகள் விடுவிப்பு குறித்தும் நான் தொடர்ந்து நாடாளுமன்றத்திலும், தங்களிடமும் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றேன். இது குறித்தும் உரிய நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்ளப்பட வேண்டும்.

அதே நேரம், மேற்படி இரு விடயங்கள் குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் அவர்கள் கூறியதாக ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்திகள் முரண்நிலை கொண்டவையாக இருப்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

அரசியல் கைதிகள் மற்றும் காணிகள் விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதி உத்தரவிட்டு ஒரு வருடமாகியும் இன்னும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என ஜனாதிபதி அவர்கள் சம்பந்தன்  அவர்களிடம் கூறியதாகவும், இதனை சம்பந்தன் அவர்களே தெரிவித்ததாகவும் ஒரு செய்தி கடந்த 17ம் திகதி ஊடகங்களில் வெளிவந்திருந்தது. பின்னர், ஜனாதிபதி உத்தரவிட்டால் காணிகள் விடுவிக்கப்டும் என பாதுகாப்பு தரப்பினர் கூறியதாக சம்பந்தன் அவர்கள் கூறியதாக ஒரு செய்தி கடநத 18ஆம் திகதி ஊடகங்களில் வெளிவந்துள்ளது.

இந்த இரண்டு செய்திகளிலும் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் முரண்நிலைகளைக் கொண்டதாகவே இருப்பதால் எமது மக்களுக்கு இது தொடர்பில் தாங்கள் தெளிவுபடுத்த வேண்டும். மேற்படி செய்திகளில் எது உண்மை? எதை எமது மக்கள் நம்புவது? என்பதில் குழப்ப நிலையே காணப்படுகின்றது. எனவே, இந்த விடயத்தில் தம்மையும் குழப்பி, மக்களையும் குழப்புகின்ற நிலை ஏற்படக்கூடாது. தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் காணி விடுவிப்பு, காணாமற்போனோர் தொடர்பில் கண்டறிதல் போன்ற பிரச்சினைகள் எமது மக்களின் உணர்வுகளோடும், உயிர் வாழக்கூடிய வாழ்வாதாரங்களோடும் பின்னிப் பிணைந்துள்ள பிரச்சினைகள். எனவே, இவை உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டியவை. ஒன்றுக்கொன்று முரணான கருத்துக்களை தெரிவித்து, காலங்கடத்தக்கூடிய பிரச்சினைகளல்ல எனத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


வடக்கு - கிழக்கில்  விசேட தேவையுடைய நிலையில் வாழ்ந்துவரும் பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்ட...
எமது கலாசார விழுமியங்களை மென்மேலும் வளர்த்தெடுக்க என்றும் துணை நிற்பேன் - கலைஞர் கௌரவிப்பு நிகழ்வில்...
இயற்கை அனர்த்தங்களின்போது மக்கள்மீதும், இயற்கை மீதும் பழிபோடுவது முறையா?சபையில் டக்ளஸ் தேவானந்தா கேள...
வடக்கின் இயற்கை வளம்  சட்டவிரோதமாக சூறையாடப்படுகின்றது - டக்ளஸ் தேவானந்தா
வடக்கில் யுத்தத்திற்கு முன்பிருந்த தொழில் முயற்சிகள் தற்போது மீள முன்னெடுக்கப்படாத நிலையே காணப்படுகி...